கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாதான் பொறுப்பு- அமெரிக்கா திட்டவட்டம்

Spread the love

கொரோனா வைரஸ் பரவலுக்கும், அதனால் ஏற்பட்டு வருகிற உயிரிழப்புகளுக்கும் சீனாதான் பொறுப்பேற்க வேண்டும் என்று அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

வாஷிங்டன்,

சீனாவில் உள்ள உகான் நகரத்தில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி தோன்றி வெளிப்பட்ட கொரோனா வைரஸ், முதலில் அந்த நாட்டில் பரவியது. அதைத் தொடர்ந்து இந்த 6 மாத காலத்தில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி விட்டது. உலகளவில் இந்த தொற்று 91 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு பரவி உள்ளது. 4 லட்சத்து 72 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி இருக்கிறது.

உலகிலேயே இந்த வைரஸ் தொற்று அமெரிக்காவைத்தான் மிக அதிகமாக பாதித்துள்ளது. அங்கு 23 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு இந்த தொற்று பாதிப்பு உள்ளது. 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி இறந்தும் உள்ளனர். இன்னும் அமெரிக்காவில் கொரோனாவின் ருத்ர தாண்டவம் தொடர்கிறது.

கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கியபோது அதன் உண்மைத்தகவல்களை வெளியிடாமல், சீனா மறைத்து விட்டது என்று அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறது.

சமீபத்தில் ஓக்லஹோமா மாகாணத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்திலும் கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாவைத்தான் ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சுமத்தினார். அது மட்டுமின்றி அங்கு இந்த வைரசை அவர் குங்புளூ என்று அழைத்தார். இந்த நிலையில் வாஷிங்டன் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கெய்லீக் மெக் எனானி நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கொரோனா வைரஸ் தொற்றின் உலகளாவிய பரவலுக்கும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கும் சீனாதான் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார்.

அத்துடன் கொரோனா வைரசை குங்புளூ என்று டிரம்ப் அழைத்தது உள்ளிட்ட பல கேள்விகளை நிருபர்கள் எழுப்பினர். அவற்றுக்கு கெய்லீக் மெக் எனானி பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு காரணம் சீனாதான். இப்படி கூறியதற்கு ஜனாதிபதி ஒருபோதும் வருத்தப்படவில்லை. அமெரிக்க துருப்புகள் மீது தவறான தகவல்களை சீனா பரப்புகிறது. ஆனால் அமெரிக்க துருப்புகளுக்கு ஜனாதிபதி ஆதரவாக நிற்கிறார்.

ஜனாதிபதி கொரோனா வைரசை குங்புளூ என கூறியது இனவெறி கருத்து அல்ல. சீனாவில் தோன்றியது குங்பு. அதைப்போலவே கொரோனா வைரசும் அங்கு தோன்றியதால் அந்தப் பெயரால் அழைத்தார். அமெரிக்க படைவீரர்கள் மீது குற்றம் சுமத்தி சீனா வரலாற்றை அபத்தமாக மீண்டும் எழுத முற்படுகிறது. இந்த நேரத்தில், ஜனாதிபதி கொரோனா வைரசை அதன் தோற்ற இடத்தை வைத்துத்தான் அப்படிக்கூறினார். இதையே அவரும் சொல்கிறார்.

இந்த வார்த்தை ஆசிய அமெரிக்கர்களை குறிப்பிடாது. டிரம்ப், கொரோனா வைரசை அதன் பிறப்பிடத்தோடு தொடர்புபடுத்தித்தான் அப்படி குறிப்பிட்டார்.

நாங்கள் இங்கே உள்ள ஆசிய அமெரிக்க இனத்தை பாதுகாக்கிறோம். அவர்கள் ஆச்சரியத்துக்கு உரியவர்கள். கொரோனா வைரஸ் பரவல், எந்த விதத்திலும் அவர்கள் தவறு கிடையாது. அதில் இருந்து விடுபடுவதற்கு அவர்கள் எங்களோடு நெருக்கமாக இருந்து பணியாற்றுகிறார்கள். நாங்கள் ஒன்றாகவே இருப்போம். இது மிகவும் முக்கியமானது. எனவே இது ஆசிய அமெரிக்கர்கள் பற்றிய விவாதம் அல்ல. ஜனாதிபதி அவர்களை மதிக்கிறார். அவர்களை இந்த மாபெரும் நாட்டின் குடிமக்களாக போற்றுகிறார்.

கொரோனா வைரசை ஜனாதிபதி டிரம்ப், சீனா வைரஸ், உகான் வைரஸ் என்று சொல்வதாக ஊடகங்கள் விமர்சித்து கொண்டு, அவர்களும் இந்த வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள்.

சீன வைரஸ் என்றுதான் கொரோனா வைரசை தி நியுயார்க் டைம்ஸ் ஏடும், ரெயிட்டர்ஸ் நிறுவனமும், தி வாஷிங்டன் போஸ்ட் ஏடும் குறிப்பிட்டுள்ளன. இது தொடர்பாக என்னிடம் ஒரு டஜனுக்கும் மேலான உதாரணங்கள் இருக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page