‘எச்1 பி’ விசா வழங்க டிரம்ப் இடைக்கால தடை- அமெரிக்க எதிர்க்கட்சிகள் விமர்சனம்

Spread the love

‘எச்1 பி‘ விசா வழங்க டிரம்ப் இடைக்காலத் தடை விதித்து டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அந்த நாடு ‘எச்1 பி‘ விசா வழங்கி வருகிறது. இந்த ‘எச்1 பி‘ விசா வழக்கமாக 3 ஆண்டுகள் வரையே நிர்ணயித்து வழங்கப்படும். பிறகு தேவைப்பட்டால் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து கொள்ள முடியும்.

இந்த விசாவை உலக நாடுகளில் அதிக அளவு இந்தியர்களும், சீனர்களும்தான் பெற்று வருகின்றனர். குறிப்பாக ஐ.டி. என்றழைக்கப்படுகிற தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றுகிறவர்கள் மத்தியில் இந்த விசாவுக்கு தனி மவுசு உள்ளது.

இதனிடையே டிரம்ப் ஜனாதிபதி பதவிக்கு வந்தது முதல் “அமெரிக்கா அமெரிக்க மக்களுக்கே“ என்ற கொள்கையை தீவிரமாக செயல்படுத்தி வருகிறார். அந்த அடிப்படையில் அமெரிக்க மக்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் ‘எச்1பி‘ விசாவில் பல்வேறு கட்டுப்பாடுகளை அவர் கொண்டு வந்தார். இந்த நிலையில் உலகில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக அந்நாட்டில் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. கோடிக்கணக்கான அமெரிக்கர்கள் வேலையை இழந்து வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வந்து வேலை செய்வதற்காக வழங்கப்படும் ‘எச்1 பி‘, ‘எச்2 பி‘, ‘எல்‘ மற்றும் ‘ஜே‘ விசாக்கள் வழங்குவதை இந்த ஆண்டு இறுதி வரை நிறுத்திவைக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவு இன்று (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. ஜனாதிபதி டிரம்பின் இந்த அதிரடி உத்தரவு இந்தியாவைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர்கள் மற்றும் அமெரிக்காவில் உள்ள இந்திய நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிதாக ‘எச்1 பி‘ விசாவுக்கு விண்ணப்பித்தவர்கள் மட்டுமின்றி, ‘எச்1 பி‘ விசா நீட்டிப்புக்காக காத்திருக்கும் பல ஆயிரக்கணக்கான இந்திய தொழில்நுட்ப வல்லுனர்களும் இந்த உத்தரவால் பாதிக்கப்படுவார்கள்.

இந்தப் புதிய உத்தரவு குறித்து ஜனாதிபதி டிரம்ப் கூறியதாவது:

அமெரிக்க தொழிலாளர்கள் நமது நாட்டின் பல்வேறு துறையிலும் பணியாற்றும் வெளிநாட்டினருடன் போட்டியிடுகின்றனர். இதில், தற்காலிகமாக வேலை செய்ய நாட்டுக்குள் நுழைபவர்களும் அடங்குவர். தற்காலிகமாக வருபவர்கள் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் வருகின்றனர்.

அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு எதிராகக் கடுமையாகப் போட்டியிடுகின்றனர். சாதாரண சூழ்நிலைகளில் இந்தத் தொழிலாளர்கள் அமெரிக்காவின் பொருளாதார நன்மைகளுக்காகச் செயல்பட முடியும்.

ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான இந்தச் சூழலில் இவை பாதிப்பை ஏற்படுத்தும்.

அதாவது, வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை அங்கீகரிப்பதன் மூலமாக அமெரிக்க குடிமக்களின் வேலைவாய்ப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்.2020ம் ஆண்டில் நெருக்கடியான காலகட்டத்தில் மட்டும் 2 கோடிக்கும் அதிகமான அமெரிக்க மக்கள் தங்களது வேலைகளை இழந்துள்ளனர். எனவே, இந்த விசாக்களை ரத்து செய்வதன் மூலமாக அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிக அளவில் ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்

இதனிடையே நவம்பர் மாதம் நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்கு பயன்படும் வகையில் இந்த உத்தரவை டிரம்ப் பிறப்பித்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கொரோனா விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்களிலும் அவர் எடுத்த நடவடிக்கைகள் அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அமெரிக்க மக்களின் ஆதரவை அதிகரிக்க இந்த உத்தரவை அவர் பிறப்பித்ததாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page