கொரோனா தொற்றை கண்டறிய கடந்த 23 ந் தேதி வரை நாடு முழுவதும் 73.5 லட்சம் மாதிரிகள் சோதனை நடத்தப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:
நாடு முழுவதும் காட்டுத்தீ போல கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இந்த தொற்று பரவலை தடுப்பதில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிப்பதில் முக்கிய பங்கு இருக்கிறது. இதன்மூலம் தொற்று பாதித்தவர்கள் சீக்கிரமாக கண்டறியப்படுகிறார்கள். தொடர்பு தடம் விரைவாக கண்டறியப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் பரவல், தடுக்கப்படுகிறது.
இந்தியாவில் சமீப காலமாக பரிசோதனை வசதிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இதன்காரணமாக ஒவ்வொரு நாளும் சோதிக்கப்படுகிற மாதிரிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
அந்த வகையில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) ஒரே நாளில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 195 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் நாடு முழுவதும் பரிசோதிக்கப்பட்டுள்ள மாதிரிகளின் மொத்த எண்ணிக்கை 73 லட்சத்து 52 ஆயிரத்து 911 ஆக உயர்ந்துள்ளது. இதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்தது.
இந்தியாவின் பரிசோதனை விகிதம் 10 லட்சம் மக்கள்தொகைக்கு 5371 ஆக உள்ளது. நேற்று அரசு ஆய்வகங்களில் 1,71,587 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன, 43,608 மாதிரிகள் தனியார் ஆய்வகங்களால் பரிசோதிக்கப்பட்டன. தனியார் ஆய்வகங்கள் இந்த அளவுடன் ஒரு நாளைக்கு மிக உயர்ந்த மாதிரியை எட்டியுள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், கொரோனா பரிசோதனை செய்வதற்கு 1000-வது பரிசோதனை கூடத்துக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அங்கீகாரமும் வழங்கி உள்ளது.
தற்போது நாட்டில் கொரோனா பரிசோதனை செய்வதற்காக அரசுத்துறையில் 730 பரிசோதனைக்கூடங்களும், தனியார் துறையில் 270 பரிசோதனைக்கூடங்களும் உள்ளன.
இவற்றில் 557 பரிசோதனைக்கூடங்கள் ஆர்.டி.பி.சி.ஆர். வகை சோதனைகளை செய்கின்றன. 363 பரிசோதனைக்கூடங்கள் ‘ட்ரூநேட்’ பரிசோதனைக்கூடங்களாகவும், 80 பரிசோதனைக்கூடங்கள் ‘சிபிநாட்’ பரிசோதனைக்கூடங்களாகவும் அமைந்துள்ளன.
இருப்பினும், நமது நாட்டில் 130 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்வதால், கொரோனா பரிசோதனைகளை அதற்கேற்ப அதிகரிப்பது என்பது மாபெரும் சவாலாக உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுகளை கண்டறிவதில் சோதனைகள் எல்லோரையும் சென்றடைய ஏதுவாக அதிரடியான பரிசோதனைகளை அறிமுகம் செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கருதுகிறது.
தற்போது கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதில் பரவலான முறையாக ஆர்.டி.பி.சி.ஆர். முறை இருந்து வருகிறது. இதில் மாதிரியை சேகரித்த பின்னர் முடிவு வருவதற்கு 4-5 மணி நேரம் ஆகிறது. இந்த சோதனையின் முக்கிய அம்சம், மிகவும் துல்லியமானது என்பதாகும்.
ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் ஜெனரலும் சுகாதார ஆராய்ச்சித் துறையின் செயலாளருமான டாக்டர் பால்ராம் பார்கவா கூறும் போது :-
நாங்கள் 71 லட்சத்துக்கும் மேற்பட்ட மாதிரிகளை சோதித்துள்ளோம், ஒரு நாளைக்கு சுமார் 2 லட்சம் மாதிரிகளை சோதித்து வருகிறோம். சோதனை உள்கட்டமைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, என கூறினார்.