பாகிஸ்தான் தூதரக ஊழியர்கள் எண்ணிக்கையை குறைப்பதுபோல், இந்தியாவும் தனது தூதரக ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தி உள்ளது.
இஸ்லாமாபாத்,
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக உயர் அதிகாரியை நேரில் அழைத்தது. உளவு பார்ப்பதிலும், பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பிலும் இருப்பதால், பாகிஸ்தான் தூதரக ஊழியர்கள் எண்ணிக்கையை 7 நாட்களுக்குள் பாதியாக குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
இந்நிலையில், இந்தியாவுக்கு போட்டியாக, நேற்று இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக உயர் அதிகாரியை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பி நேரில் அழைத்தது.
அவரிடம், பாகிஸ்தான் தூதரக ஊழியர்கள் எண்ணிக்கையை பாதியாக குறைக்க சொன்னதற்காக இந்தியாவுக்கு பாகிஸ்தான் வெளியுறவு அதிகாரிகள் கண்டனம் தெரிவித்தனர். இந்த எண்ணத்தில், பாகிஸ்தான் மீது சுமத்தப்பட்ட அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாகவும் கூறினர்.
மேலும், வியன்னா தீர்மானத்துக்கு முரணாக டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் நடந்து கொள்ளவில்லை என்றும், சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டே செயல்பட்டு வந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை பாகிஸ்தான் அச்சுறுத்தவில்லை என்றும் மறுத்தனர்.இந்தியாவும் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக ஊழியர்கள் எண்ணிக்கையை 7 நாட்களுக்குள் பாதியாக குறைக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கூறினர்.