அமெரிக்காவின் எச் -1 பி விசா முடக்கம் ஏன் இந்தியாவை அதிக அளவு பாதிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
வாஷிங்டன்
உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய நோயாக கொரோனா வைரஸ் உள்ளது. இந்த நோய் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில், அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.அதுமட்டுமின்றி, கொரோனா’ வைரஸ் பரவலால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பால், அமெரிக்காவில் லட்சகணக்கானவர்கள் வேலை இழந்துள்ளனர்.
இதையடுத்து, அமெரிக்காவில் வேலை பார்க்கும் வெளிநாட்டவருக்கு, கிரீன் கார்டு எனப்படும் குடியுரிமை வழங்குவதை, 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக, ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஏப்ரலில் அறிவித்தார்.
இது, இந்தாண்டு இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க குடியுரிமை சட்டத்தின்கீழ், ஆண்டுக்கு, 1.40 லட்சம் வெளிநாட்டவருக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. இது அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டவர், அவருடன் இருக்கும் அவருடைய மனைவி அல்லது கணவர், குழந்தைகளுக்குப் பொருந்தும்.
தற்போதைய நிலையில், கிரீன் கார்டு கேட்டு, 10 லட்சம் பேர் காத்திருக்கின்றனர். மேலும் ஒரு நாட்டுக்கு அதிகபட்சம், 7 சதவீதம் மட்டுமே கிரீன் கார்டு வழங்கப்படும். இந்தக் கட்டுப்பாடுகளால் அமெரிக்காவில் அதிக அளவில் பணிபுரியும் இந்தியா, சீனாவைச் சேர்ந்தவர்கள், கிரீன் கார்டு கிடைப்பதற்கு பல ஆண்டுகள் காத்திருக்கும் நிலை உள்ளது. தற்போது அது நிறுத்தி வைக்கப்படுவதால், இந்த எண்ணிக்கை மேலும் உயரும்.
இந்த நடவடிக்கை இந்தியாவை கடுமையாக பாதிக்கும். ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் எச் -1 பி விசாக்களில் முக்கால்வாசிப்பேர் இந்தியர்களே. இருப்பினும் முதல் ஏழு இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த திட்டத்தின் கீழ் மொத்த விசாக்களில் 6 சதவீதம் மட்டுமே பெறுகின்றன
அமெரிக்கா மற்றும் இந்தியாவில் உள்ள அலுவலகங்களைக் கொண்ட குடிவரவு சட்ட நிறுவனமான லா குவெஸ்டில் நிர்வாக பங்குதாரர் பூர்வி சோட்டானி கூறியதாவது:-
டொனால்ட் டிரம்ப் வரவிருக்கும் தேர்தலைக் கருத்தில் கொண்டு “சட்டப்பூர்வ குடியேற்றத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்துகிறார்.தொற்றுநோயால் இழந்த 1.7 கோடிக்கும் அதிகமான வேலைகளை அமெரிக்கா எவ்வாறு மீட்க முடியும்? ஆண்டு முழுவதும் 50 லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டு தொழிலாளர்களை வைத்திருக்கிறது என கூறினார்.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆராய்ச்சியாளர்கள் சஞ்சோய் சக்ரவர்த்தி, தேவேஷ் கபூர் மற்றும் நிர்விகர் சிங் தங்கள் ஆய்வில் 2010 களின் முற்பகுதியில், ஒவ்வொரு ஆண்டும் திறமையான அடிப்படையிலான தேர்வுகள் மூலம் அமெரிக்காவிற்குள் நுழைந்த 100,000 இந்தியர்களில் 60 சதவீதம் பேர் எச் -1 பி விசாவில் இருப்பதைக் கண்டறிந்தனர். அவர்கள் முக்கியமாக கணினி தொடர்பான தொழில்களில் பணியாற்றினர்.
2004 மற்றும் 2012 க்கு இடையில் வழங்கப்பட்ட 10 லட்சம் எச் -1 பி விசாக்களில் கிட்டத்தட்ட பாதி இந்தியர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அவர்கள் சார்ந்து இருப்பவர்களுடன் சேர்ந்து, இந்திய-அமெரிக்க மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்கிற்கும் அதிகமானவர்கள் உள்ளனர், இது தற்போது 30 லட்சமாக உள்ளது என தெரியவந்து உள்ளது.