இங்கிலாந்தில் புதிய அணுகுமுறையில் உருவானகொரோனா தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தி சோதனை

Spread the love

கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்குத் தெரியாத எதிரியின் ஆதிக்கத்தில் இருந்து இந்த உலகம் ஒரு நாள் விடுபட்டே தீரும்.

அடர்ந்த இருளுக்கு பின்னர் ஒரு வெளிச்சம் வந்தே தீரும்.

கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்குத் தெரியாத எதிரியின் ஆதிக்கத்தில் இருந்து இந்த உலகம் ஒரு நாள் விடுபட்டே தீரும். அந்த நாள் எந்த நாள் என்பதுதான் இன்றைக்கு ஒட்டுமொத்த உலகத்தின் முன் எழுந்து நிற்கும் கேள்விக்குறி.

இந்த நூற்றாண்டின் மிக கொடுமையான வைரஸ் என்ற பெயரை இந்த கொரோனா வைரஸ்தான் பெறுகிறது. இதன் பாதிப்புகளும் நூற்றாண்டு காணாதவை என்றால் மறுக்க முடியாது.

உலகமெங்கும் 200 நாடுகளில் 94 லட்சத்துக்கும் அதிகமானோரின் உடல்களில் இந்த கொலைகார வைரஸ் புகுந்து விட்டது. 4 லட்சத்து 83 ஆயிரம் பேரின் உயிர்களையும் பறித்து விட்டது. இந்த வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட தொடர் ஊரடங்குகளால் உலகமெங்கும் கோடிக்கணக்கானோருக்கு வேலை இழப்பு, வாழ்வாதாரம் இழப்பு, படிப்பு இழப்பு, பொருளாதார இழப்பு என இழப்புகளின் பட்டியல் நீளுகிறது.

ஆனால், இன்னும் இந்த வைரசின் ஆதிக்க வெறி நாளுக்கு நாள் தீவிரமாகிக்கொண்டேதான் செல்லும் என்று உலகளவில் விஞ்ஞானிகள் சொல்வதைக் கேட்கிறபோது, பதற்றமாகத்தான் இருக்கிறது.

ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு யுகமாகத்தான் இப்போது மனித குலம் கழித்துக்கொண்டிருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.

கொரோனா வைரஸ் என்ற ராட்சசன் வராமல் தடுப்பதற்கு உலகமெங்கும் ஏறத்தாழ 120 தடுப்பூசி திட்டங்கள், முடுக்கி விடப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாடும், இந்த வைரசை வீழ்த்தும் தடுப்பூசியை தாங்கள்தான் கொண்டு வர வேண்டும் என்பதில் முழுவீச்சில் வேலை செய்து வருகின்றன.

அந்த வகையில் இப்போது இங்கிலாந்தில் லண்டன் இம்பீரியல் கல்லூரியில் உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசி பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசியை விலங்குகளுக்கு செலுத்தி வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது.

அந்த சோதனை, தடுப்பூசியை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. இந்த தடுப்பூசி பாதுகாப்பானது, நோய் எதிர்ப்புச்சக்தியை தூண்டக்கூடியது என்பதை கண்டறிந்துள்ளனர்.

இம்பீரியல் கல்லூரியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை செலுத்திய நபர்களில் ஒருவர், நிதித்துறையில் உள்ள கேத்தி என்ற 39 வயது பெண். இந்த தடுப்பூசியை தானாக முன்வந்து போட்டுக்கொண்ட நபர்களில் இவரும் ஒருவர். கொரோனா வைரசுக்கு எதிரான போரில் பங்கு வகிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த தடுப்பூசி பரிசோதனைக்கு நான் முதலில் முன்வந்தேன் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

அது மட்டுமின்றி, “ஒரு தடுப்பூசியை உருவாக்கி வெளியே கொண்டு வந்தால் மட்டுமே, உலகம் தற்போதைய நிலையில் இருந்து இயல்பு நிலைக்கு மாற முடியும் என்ற புரிதல் எனக்கு இருக்கிறது. எனவேதான் இந்த தடுப்பூசியை தாமாக முன்வந்து உடலில் செலுத்திக்கொள்ளும் தன்னார்வலர்களில் ஒருவராக நான் இருக்க முடிவு செய்தேன்” என்கிறார்.

இந்த தடுப்பூசியை அடுத்த கடடமாக அக்டோபர் மாதம் 6 ஆயிரம் பேருக்கு செலுத்தி சோதித்துப்பார்ப்பார்கள். இது பிரமாண்ட சோதனை முயற்சியாக அமையப்போகிறது.

அந்த பரிசோதனையும் வெற்றி அடையும் என்ற நம்பிக்கையில் விஞ்ஞானிகள் இருக்கிறார்கள். அதனால்தான் இந்த தடுப்பூசி இங்கிலாந்து நாட்டிலும் சரி, பிற நாடுகளிலும் சரி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கிடைக்கத்தொடங்கி விடும் என்று இம்பீரியல் விஞ்ஞானிகள் குழுவினர் கூறி உள்ளனர்.

மற்ற தடுப்பூசிகளுக்கும் இந்த தடுப்பூசிகளுக்கும் ஒரு சிறப்புத்தன்மை இருக்கிறது என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். அப்படி இதில் மட்டும் என்ன சிறப்பு இருக்கிறது?

பொதுவாக வைரசுக்கு எதிரான தடுப்பூசிகள், வைரசை பலவீனப்படுத்தியோ, மாற்றி அமைத்தோ அதன் அடிப்படையில் உருவாக்கக்கூடியவையாகதான் இருக்கும்.

ஆனால் இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகள் ‘இன்னோவேடிவ்’ என்று சொல்லத்தக்க வகையில் ஒரு புதிய அணுகுமுறை வாயிலாக இந்த தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர்.

ஆர்.என்ஏ. (ரைபோநியூக்ளிக் அமிலம்) என்று அழைக்கப்படுகிற வைரசின் மரபியல் குறியீட்டின் கூறுகளை இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகள் செயற்கையாக உருவாக்கி உள்ளனர். இது அச்சு அசலாக வைரசைப்போலவே தோற்றம் அளிக்கும். இதை சிறிதளவு உடலில் செலுத்துவார்கள். அப்படி இதை உடலில் செலுத்துகிறபோது, ஆர்.என்.ஏ. கூறானது, பல்கிப்பெருகும். வைரசின் வெளிப்புறம் உள்ள ‘ஸ்பைக் புரோட்டின்’ என்று சொல்லப்படுகிற கூர்மையான புரதம அமைப்பை அது நகல் எடுத்துக்கொள்ளும்படிக்கு உடலில் உள்ள செல்களுக்கு கட்டளையிடும்.

இதன்மூலமாக கொரோனா வைரசை அடையாளம் கண்டு, அதை எதிர்த்து போராடவும் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்புக்கு இந்த தடுப்பு மருந்து பயிற்றுவிக்கும். அது மட்டுமின்றி இந்த தடுப்பு மருந்தினை உடலில் செலுத்துவோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுவிடாதபடிக்கு பாதுகாப்பு அரணாகவும் இருக்கும்.

இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம், மிக மிக நுண்ணிய அளவிலான வைரசின் ஆர்.என்.ஏ. குறியீடு மட்டுமே தடுப்பு மருந்தாக செலுத்தப்படும்.

ஒரு லிட்டர் செயற்கை ஆர்.என்.ஏ.யை கொண்டு, 20 லட்சம் பேருக்கு செலுத்தக்கூடிய தடுப்பூசி ‘டோஸ்’களை தயாரிக்க முடியும் என்று இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

தற்போது தேவையான ‘டோஸ்’களை அமெரிக்காவில் தயாரித்துள்ளனர். இந்த ஆண்டின் பின்பகுதியில் இதன் உற்பத்தியை இங்கிலாந்துக்கு மாற்றி விட முடியும், அப்போது பெருமளவு உற்பத்தியை இங்கிலாந்தில் செய்து கொள்ள வழி பிறந்துவிடும் என்பது விஞ்ஞானிகளின் கருத்தாக அமைந்துள்ளது. இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகளின் தடுப்பூசியை முதல் நாளில் ஒருவருக்கும், அடுத்து 48 மணி நேரத்துக்கு ஒரு முறை 3 பேருக்கும் செலுத்துகிறார்கள். ஒரு வாரத்துக்கு பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

இந்த தடுப்பூசியை உருவாக்கிய விஞ்ஞானிகள் குழுவில் அங்கம் வகிக்கும் பேராசிரியர் ராபின் ஷாடோக் கூறும்போது, “எங்கள் தடுப்பூசி அணுகுமுறையில் புதியது. எங்கள் அணுகுமுறை செயல்பட்டு, கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி சிறந்த பாதுகாப்பை அளிக்கிறபோது, அது எதிர்காலத்தில் தொற்று நோய் வெடிப்புகளுக்கு நாங்கள் எவ்வாறு பதில் அளிப்போம் என்பதில் புரட்சியை ஏற்படுத்தும்” என்று சொல்கிறார்.

இந்த தடுப்பூசி முயற்சியில் தலைமை புலனாய்வாளராக பணியாற்றும் டாக்டர் கேத்ரினா பொல்லாக், “எங்கள் குழுவினர் ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு தடுப்பூசியை கண்டறிவார்கள் என்று நான் நம்பிக்கையுடன் உணரவில்லை என்றால் இந்த சோதனையில் பணியாற்றி இருக்க மாட்டேன். முன் மருத்துவ தரவுகள் அனைத்தும் நம்பகத்தன்மை கொண்டவையாக தோன்றின. நாங்கள் நடுநிலையான ஆன்டிபாடியை பெறுகிறோம். இது, நோய்த்தொற்றில் இருந்து நீங்கள் பார்க்க விரும்பும் நோய் எதிர்ப்பு பதிலடியாக அமையும்” என்று கூறினார்.

இந்த தடுப்பூசி உள்ளபடியே நம்பிக்கை தருகிறது. இது, கொரோனாவை வேரடி மண்ணாக வீழ்த்தும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று நம்பலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page