போலீசாரால் படுகொலை செய்யப்பட்ட தந்தை, மகன் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு- மாஜிஸ்திரேட்டு 2-வது நாளாக விசாரணை

Spread the love

போலீசாரால் படுகொலை செய்யப்பட்ட தந்தை, மகன் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு பொதுமக்கள் திரண்டு நின்று, அவர்களது உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசரடி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 55). இவருடைய மகன் பென்னிக்ஸ் (31). இவர்கள் சாத்தான்குளம் மெயின்பஜாரில் செல்போன் கடை நடத்தி வந்தனர். சம்பவத்தன்று இரவு ஊரடங்கை மீறி கடையை திறந்து வைத்திருந்த விவகாரத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் போலீசார் அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், அவர்கள் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பின்னர் 2 பேரும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 22-ந் தேதி இரவு பென்னிக்சுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். ஜெயராஜூம் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, மறுநாள் பலியானார்.

அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டன. மதுரை ஐகோாட்டு உத்தரவின்படி நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் பிரேத பரிசோதனை தொடங்கியது. முதலில் பென்னிக்ஸ் உடலும், அதன்பிறகு ஜெயராஜ் உடலும் அடுத்தடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. இது வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

இரவு 11.30 மணியளவில் பிரேத பரிசோதனை முடிந்தது. அதுவரை ஜெயராஜ் உறவினர்கள், அந்த ஊரை சேர்ந்தவர்கள் காத்து இருந்தனர். பின்னர் இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யும் வரை உடல்களை வாங்க மாட்டோம் என்று கூறிவிட்டு அவர்கள் சென்றனர்.

இதையடுத்து நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் நேற்று 2-வது நாளாக விசாரணை நடத்தினார். காலையில் ஜெயராஜ் மனைவி செல்வராணி, மகள்கள் பெர்சி, பியூலா, அபிஷா மற்றும் உறவினர்கள் வந்தனர். அவர்களுடன் வக்கீல்களும் வந்தனர். அவர்களிடம் காலையில் தொடங்கிய விசாரணை மாலை வரை நடந்தது.பின்னர் அவர்களது உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான சாத்தான்குளத்துக்கு கொண்டு வரப்பட்டது. பேய்க்குளம், பன்னம்பாறை விலக்கு உள்ளிட்ட பகுதிகளில் வழிநெடுகிலும் பொதுமக்கள் திரண்டு நின்று, அவர்களது உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகில் உள்ள ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோருக்கு சொந்தமான செல்போன் கடையில் அவர்களது உடல்கள் வைக்கப்பட்டன. அவர்களது உறவினர்கள், வியாபாரிகள் சங்கத்தினர், அனைத்துக் கட்சியினர், பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மேல சாத்தான்குளத்தில் உள்ள அவர்களது வீட்டுக்கு உடல்கள் கொண்டு செல்லப்பட்டு, இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து மேலசாத்தான்குளத்தில் உள்ள கிறிஸ்தவஆலயத்தில் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம் தலைமையில், நல்லடக்க ஆராதனை நடந்தது. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் உடல்கள் அருகருகே அடக்கம் செய்யப்பட்டன.

இரட்டை கொலையில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்குமா ? புழல் தர்மராஜ் நாடார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page