‘ஆன்லைன்’ வகுப்புகள் கல்வி போதிக்கும் முறையாக மாறி உள்ளதுஐகோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு

Spread the love

ஊரடங்கினால் மாணவர்களின் கல்வி தடைப்படக்கூடாது. ‘ஆன்லைன்’ வகுப்புகள் வளர்ந்து வரும் கல்வி போதிக்கும் முறையாக மாறி உள்ளது என்று சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

சென்னை,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால், மாணவர்களுக்கு ‘ஆன்லைன்’ மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது. இதனால் கல்வி கற்கும்போது, மாணவர்கள் ஆபாச இணையதளங்கள் பார்க்க வாய்ப்பு இருப்பதாகவும், அதனால் ‘ஆன்லைன்’ வகுப்பு எடுப்பது தொடர்பாக பாதுகாப்பு விதிகளை உருவாக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் சரண்யா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் சைபர் சட்டப்பிரிவு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

தற்போது உலகமே ஒரு அசாதாரண சூழ்நிலையை எதிர்நோக்கி வருகிறது. இந்த சூழ்நிலையில், கல்வி கற்பிக்க தகவல் தொழில்நுட்ப முறையில் ஒரு மாற்று வழியாக ‘ஆன்லைன்’ வகுப்புகள் மாறி வருகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் பள்ளிக்கூடங்கள் திறக்க முடியாது என்பதால், தங்குதடையின்றி மாணவர்கள் தொடர்ச்சியாக கல்வி பயில மத்திய அரசும், மாநில அரசுகளும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளன. மனுதாரர் கூறும் விதிகளை எல்லாம் மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை ஏற்கனவே உருவாக்கி விட்டது.

‘ஆன்லைன்’ வகுப்புகளின் போது தேவையில்லாத வீடியோ அல்லது இணையதள இணைப்புகள் குறித்து, இந்தியன் கம்ப்யூட்டர் அவசர சேவை குழு அவ்வப்போது எச்சரிக்கை தகவல் வழங்கி கொண்டே இருக்கும். 2020-ம் ஆண்டில் மட்டும் 39 அறிவுரை

தகவல் அனுப்பியுள்ளன. இந்த குழுவின் அறிவுரைகளின்படி, மத்திய- மாநில அரசுகள் ‘ஆன்லைன்’ வகுப்புகளை மாணவர்களுக்கு மிகவும் பாதுகாப்புடன் நடத்த வழிவகை செய்கிறது.

இதையெல்லாம் மீறி தேவையில்லாத ‘வீடியோக்கள்’ ‘ஆன்லைன்’ படிப்பின்போது வந்தால், அது குறித்து உள்ளூர் போலீசில் புகார் செய்ய மனுதாரருக்கு முழு உரிமை உள்ளது. மத்திய அரசை பொறுத்தவரை ஊரடங்கினால் மாணவர்களின் கல்வி தடைப்படக்கூடாது என்ற கொள்கையுடன் செயல்படுகிறது. தற்போது ‘ஆன்லைன்’ வகுப்புகள் வளர்ந்து வரும் ஒரு கல்வி போதிக்கும் முறையாக மாறி உள்ளது. இந்த வழக்கில் எதிர்மனுதாரராக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தை மனுதாரர் சேர்க்கவில்லை. இந்த காரணத்துக்காகவே இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதையடுத்து நீதிபதிகள், ‘ஆன்லைன்’ வகுப்புகளினால் மாணவர்களின் விழித்திரை பாதிக்கப்படுமா? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதா?‘ என்று கேள்வி எழுப்பினர். அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘அரசு கண் ஆஸ்பத்திரி டீன் இந்த அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் கோரியுள்ளார்‘ என்றார். இதையடுத்து ‘ஆன்லைன்’ வகுப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் வருகிற ஜூலை 6-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page