2 மாதத்துக்கு தேவையான கியாஸ் சிலிண்டர்களை இருப்பு வைக்கும் உத்தரவால் காஷ்மீரில் பீதி

Spread the love

காஷ்மீரில் 2 மாதத்துக்கு தேவையான கியாஸ் சிலிண்டர்களை இருப்பு வைக்க சொன்னதாலும், 16 கல்வி நிறுவனங்களை காலி செய்ய சொன்னதாலும் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீநகர்,

கடந்த ஆண்டு, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அப்போது நிலவிய கொந்தளிப்பு தணிந்து இயல்புநிலை திரும்பி உள்ளது. இந்நிலையில், காஷ்மீர் அரசுத்தரப்பின் சமீபத்திய 2 உத்தரவுகள், அம்மாநில மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளன.

காஷ்மீர் கவர்னர் ஜி.சி.மர்முவின் ஆலோசகர், கடந்த 23-ந் தேதி ஒரு கூட்டத்தில் பேசுகையில், “நிலச்சரிவு காரணமாக, தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. எனவே, சமையல் கியாஸ் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால், போதிய சிலிண்டர்களை இருப்பு வைக்க வேண்டும்“ என்று கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, அம்மாநில உணவு மற்றும் பொது வினியோக துறை இயக்குனர் வெளியிட்ட உத்தரவில், “2 மாதங்களுக்கு தேவையான கியாஸ் சிலிண்டர்களை குடோன்களில் எண்ணெய் நிறுவனங்கள் இருப்பில் வைத்திருக்க வேண்டும். இது மிகவும் அவசர உத்தரவு“ என்று கூறியுள்ளார்.

மேலும், காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், “அமர்நாத் யாத்திரையையொட்டி, மத்திய ஆயுத போலீஸ் படையினர் தங்குவதற்காக, மாவட்டத்தில் உள்ள 16 கல்வி நிறுவனங்களை காலி செய்து ஒப்படைக்க வேண்டும்“ என்று அவர் கூறியுள்ளார்.

சீன எல்லையில் பதற்றம் நிலவி வரும்போது இந்த இரண்டு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், சீன விவகாரத்துடன் இவற்றை முடிச்சுப்போட்டு மக்கள் பாார்த்து வருகிறார்கள்.

குளிர்காலத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு, சமையல் கியாஸ் வினியோகம் பாதிக்கப்படும் என்பது காஷ்மீரில் இயல்பானதுதான். ஆனால், இது கோடை காலம் என்பதால், மக்கள் இந்த உத்தரவை சந்தேக கண்கொண்டு பார்க்கிறார்கள்.

இதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி துணைத்தலைவருமான உமர் அப்துல்லா, தனது ‘டுவிட்டர்‘ பதிவில் கூறியிருப்பதாவது:-

இந்த 2 உத்தரவுகளும் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளன. கடந்த ஆண்டு சிறப்பு அந்தஸ்து ரத்து சமயத்தில் அரசு அளித்த அனைத்து வாக்குறுதிகளும் பொய் என்று நிரூபணமாகி விட்டன. எனவே, அரசின் விளக்கங்களுக்கு எந்த மதிப்பும் இருக்காது. இருப்பினும், அரசு விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அத்துடன், கல்வி நிறுவனங்களை காலி செய்யும் உத்தரவையும் மக்கள் சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். கந்தர்பாலில் வசிக்கும் ஒவைஸ் மிர் என்பவர் கூறுகையில், “அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு ஏற்பாடுகள் எங்களுக்கு தெரியும். கொரோனா காரணமாக, இந்த ஆண்டு குறைவான பக்தர்களே வருவார்கள். அப்படி இருக்கும்போது, அதிகமான படையினரை வைத்து அரசு என்ன செய்யப்போகிறதோ?“ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page