ஐகோர்ட்டு உத்தரவுப்படி கொலை வழக்குப்பதிவு செய்து போலீஸ் அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Spread the love

‘காவல்துறை வரலாற்றில் சாத்தான்குளம் சம்பவம் பெரிய கரும்புள்ளி’ என்றும், ‘ஐகோர்ட்டு உத்தரவுப்படி கொலை வழக்குப்பதிவு செய்து போலீஸ் அதிகாரிகளை கைது செய்யவேண்டும்’ என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


சென்னை,

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் கொலை வழக்கு விசாரணையை உடனடியாக சி.பி.சி.ஐ.டி மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவு கணவரையும், மகனையும் இழந்து நிற்கும் அந்தக் குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ள முதற்கட்ட நீதி. இந்த வழக்கை விசாரணை செய்ய சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு சென்ற நீதிபதியை, போலீஸ் அதிகாரிகள் மிரட்டியுள்ளனர்.

சென்னை ஐகோர்ட்டு மதுரைக் கிளைப் பதிவாளரிடம் கோவில்பட்டி முதலாவது நீதித்துறை நடுவர் மின்னஞ்சல் மூலம் அளித்துள்ள அறிக்கையைப் பார்க்கும்போது, ஒரு நீதித்துறை நடுவருக்கே காவல் நிலையத்தில் இந்தக் கொடுமை என்றால், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை அந்த காவல் நிலையத்தில் வைத்து எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தியிருப்பார்கள்? என்பதை நினைத்து நெஞ்சம் பதறுகிறது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதிகள், நீதித்துறை நடுவர் விசாரணை செய்வதைத் தடுப்பதற்கு மாவட்ட போலீஸ் நிர்வாகம் தன்னிடம் உள்ள அனைத்து அதிகாரத்தையும் பயன்படுத்துகிறது, என்று தீர்ப்பில் கூறியுள்ளனர்.

ஐகோர்ட்டு அனுப்பிய ஒரு நீதிபதியை ஒரு காவலர் தானாகவே மிரட்டினார் என்பதை எப்படி நம்புவது? மனஉளைச்சல் இருந்தால் யாரை வேண்டுமானாலும் மிரட்டலாமா? ஐகோர்ட்டு தாமாகவே முன்வந்து விசாரிக்கும் ஒரு வழக்கில், துறை அமைச்சரான முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குத் தெரியாமல் இவை அனைத்தும் நடந்துவிட்டன என்பதை நம்ப முடியவில்லை.

ஐகோர்ட்டு தலையிட்ட பிறகு கூடுதல் டி.எஸ்.பி.,யும், டி.எஸ்.பி.,யும் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு மகராஜன் என்ற காவலர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட எஸ்.பி.யையும் மாற்றி இருக்கிறார்கள். ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை எடுத்த பிறகுதான் இவை அனைத்தும் நடந்துள்ளது.

சாத்தான்குளம் காவல் நிலையத்தை வருவாய்த் துறை அதிகாரிகளின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது, தமிழகக் காவல்துறை வரலாற்றில் மிகப் பெரிய கரும்புள்ளி. ஆகவே, போலீஸ் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு காவல் நிலையத்தையே நிர்வகிக்க முடியாமல் தோல்வியடைந்த காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான கொலைகளை, உடல்நலக்குறைவால் மரணம் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி தனது முதல்-அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும். இல்லையெனில், குறைந்தபட்சம் போலீஸ் துறையின் பொறுப்பையாவது வேறு ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி, இந்திய தண்டனை சட்டம் 302-ன் கீழ் கொலை வழக்குப்பதிவு செய்து உடனே சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை கைது செய்வதோடு அவர்களுக்கு உதவியாக இருந்து இந்த இரட்டைக் கொலையை மறைக்க துணை போன அனைவரையும் குற்றவாளிகளாகச் சேர்க்கவேண்டும். அப்போதுதான் சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் தவறிழைத்தோர் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள். அப்பாவிகளாக காவல் நிலையத்திற்கு வந்து, பிரேதங்களாக அனுப்பப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை இழந்து வாடும் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page