சாத்தான்குளம் விவகாரத்தில்“போலீசாரின் நடவடிக்கை நீதியை தடுக்கும் வகையில் உள்ளது” – மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து

Spread the love

“சாத்தான்குளம் விவகாரத்தில் போலீசாரின் நடவடிக்கை நீதியை தடுக்கும் வகையில் உள்ளது” என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.


மதுரை,

தூத்துக்குடி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குமார், துணை சூப்பிரண்டு பிரதாபன், சாத்தான்குளம் போலீஸ்காரர் மகாராஜன் ஆகிய 3 பேர் மீதான கிரிமினல் அவமதிப்பு வழக்கு நேற்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

இதற்காக அவர்கள் 3 பேரும் நீதிபதிகள் முன்பாக ஆஜரானார்கள். பின்னர் தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், கூடுதல் அரசு வக்கீல் ஆனந்தராஜ் ஆகியோர் ஆஜராகி, “மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு ஒத்துழைப்பு தராதது தொடர்பான புகாரையடுத்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரதாபன் ஆகிய இருவரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளனர். போலீஸ்காரர் மகாராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். ஏற்கனவே சாத்தான்குளம் போலீஸ்நிலையத்தில் பணியில் இருந்த 24 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்” என நீதிபதிகளிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து நீதிபதிகள், “கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டுவின் அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. அவரது புகாரின் அடிப்படையில் போலீசார் மீது எடுக்கப்பட்டுள்ள கிரிமினல் அவமதிப்பு நடவடிக்கை தொடரும்” என்றனர்.

மேலும் போலீஸ் அதிகாரிகள் உள்பட 3 பேரும் தங்களுக்கு எதிரான இந்த கிரிமினல் வழக்கில் அவரவர் சார்பில் ஆஜராக வக்கீலை நியமித்துக்கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, “மாஜிஸ்திரேட்டுக்கு எதிரான போலீசாரின் நடவடிக்கை வருத்தத்துக்குரியது. போலீசார் கடும் மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளதால் இதுபோல நடந்துள்ளனர். தங்களின் நடவடிக்கைக்காக அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்” என்றார்.

அப்போது, “ஐகோர்ட்டு உத்தரவின்பேரில்தான், மாஜிஸ்திரேட்டு விசாரணை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார் என்பது அவர்களுக்கு தெரியும் அல்லவா? அப்படி இருந்தும் இடையூறு செய்தது ஏன்? பிரச்சினையை பெரிதாக்கும் நோக்கத்தில் நடந்து கொண்டதும் ஏன்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், “இவர்களின் நடவடிக்கை நீதியை தடுக்கும் வகையில் உள்ளது” என்று கருத்து தெரிவித்தனர். இவர்கள் 3 பேரும் தங்களது விளக்கத்தை வக்கீல்களின் வாயிலாக 4 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page