முப்படைக்கு ரூ.39 ஆயிரம் கோடியில் போர் தளவாடங்கள் – மத்திய அரசு ஒப்புதல்

Spread the love

சீனாவுடனான மோதலுக்கு மத்தியில் முப்படைக்கு ரூ.39 ஆயிரம் கோடிக்கு போர் தளவாடங்கள் வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


புதுடெல்லி,

லடாக் எல்லையில் சீன ராணுவம் ஊடுருவியதால் இருநாட்டு ராணுவத்துக்கும் இடையே கடந்த 2 மாதங்களாக மோதல் ஏற்பட்டு உள்ளது. இதில் கடந்த மாதம் 15-ந்தேதி இருதரப்புக்கும் இடையே நடந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்களும், சீனா தரப்பில் 35 பேரும் உயிரிழந்தனர்.

இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியாவின் முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

அதேநேரம் அங்கு அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்துவதற்காக இரு தரப்பிலும் பேச்சுவார்த்தைகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்த நிலையில் முப்படைகளுக்கும் போர் தளவாடங்கள் வாங்குவது தொடர்பாக ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான ராணுவ கொள்முதல் குழு நேற்று கூடி ஆலோசனை நடத்தியது. இதில் முப்படையினருக்கு ரூ.38,900 கோடிக்கு போர் தளவாடங்கள் வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன்படி ரஷியாவிடம் இருந்து 21 மிக்-29 தாக்குதல் ரக விமானங்கள், இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து 12 சுகோய்-30 எம்.கே.ஐ. போர் விமானங்கள் போன்றவை வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன. மேலும் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள 59 மிக்-29 ரக விமானங்களை மேம்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டது.

இதைப்போல 248 அஸ்த்ரா ஏவுகணை அமைப்புகள் மற்றும் பினாகா ஏவுகணை அமைப்புகள், நீண்டதூரம் குறிப்பாக 1000 கி.மீ. தொலைவில் உள்ள தரை இலக்கை தாக்கும் ஏவுகணை அமைப்புகள் வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தற்போதைய பாதுகாப்பு சூழலை கருத்தில் கொண்டும், நமது எல்லைகளை பாதுகாப்பதற்காக பாதுகாப்பு படையை பலப்படுத்துவதற்காகவும் இந்த ஆயுதங்கள் வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக ராணுவ அமைச்சகம் பின்னர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது. மேலும் பினாகா, அஸ்த்ரா ஏவுகணை அமைப்புகளால் கடற்படை, விமானப்படைகள் மேலும் வலுவடையும் என்றும் அதில் குறிப்பிட்டு உள்ளது.

மொத்தம் ரூ.38,900 கோடிக்கு போர் தளவாடங்கள் வாங்கும் நிலையில், இதில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட தொகைக்கு குறிப்பாக ரூ.31,130 கோடிக்கு இந்திய நிறுவனங்களிடம் இருந்தே ஆயுதங்கள் வாங்கப்படுவதாக கூறியுள்ள அமைச்சகம், அந்தவகையில் உள்நாட்டு வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பதாகவும் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page