ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்: கிராமங்களை எட்டாத இணையவழி கல்வி பாடம் நடத்த வட மாநிலங்கள் கண்டறிந்த வினோத வழிகள்

Spread the love

கொரோனா ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கிராமங்களை இணையவழி கல்வி எட்டவில்லை. பாடம் நடத்துவதற்கு வட மாநிலங்களில் வினோத வழிகளை கண்டறிந்து பின்பற்றுகின்றனர்.


புதுடெல்லி,

கொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன. பிள்ளைகளின் படிப்பு பாதிக்கக்கூடாது என்பதற்காக நவீன யுகத்தில், இணையவழியில் ஸ்மார்ட் போன் உதவியுடன் ஆசிரியர்கள் பாடம் நடத்த புறப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால் தென் மாநிலங்களைவிட வட மாநிலங்களில் பின்தங்கிய கிராமப்புறங்களில் இன்னும் இணையதள வசதிகள், சாதனங்கள் இல்லை. இதனால் ஆன்லைன் கல்வி என்பது அங்கு எட்டாத கனவாகவே நீடிக்கிறது.

நாடு முழுவதும் 35 கோடி மாணவ, மாணவிகள் இருந்தாலும் எத்தனைபேர் ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லட் போன்றவற்றை வைத்து இணையதள வசதியை கொண்டிருந்து ஆன்லைன் கல்வி கற்கிறார்கள் என்பது கேள்விக்குறியாகவே நீடிக்கிறது. இந்த அடிப்படை வசதிகளை பெருக்காமல், ஆன்லைன் கல்வி, அனைத்து மாணவ, மாணவியருக்கும் வசப்படாது என்பதுதான் யதார்த்த நிலையாக உள்ளது.

அரியானாவில் ஜாஜ்ஜார் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் சத்யநாராயணன் சர்மா என்பவர் ஒரு பள்ளிக்கூடம் நடத்துகிறார். இவர் ஏற்பாடு செய்து தந்துள்ள ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட வண்டியில் ஒரு ஆசிரியர் சென்று பாடம் நடத்துகிறார். குறிப்பிட்ட இடத்தில் மாணவ, மாணவிகள் வந்து குறிப்பு எடுத்துக்கொள்கிறார்கள். இது புதுமையாக இருந்தாலும், அங்கு வரவேற்பை பெற்றுள்ளது.

இதுபற்றி சத்யநாராயணன் சர்மா கூறும்போது, “வண்டியில் நான் ஒலிபெருக்கியை பொருத்தி ஆசிரியர்களை உடன் அனுப்புகிறேன். அவர்கள் ஒரு சாத்தியமான இடத்தில் நிறுத்தி பாடம் நடத்துகிறார்கள். வகுப்பறையில் பாடம் நடத்துவது போல இது இல்லாவிட்டாலும் கூட ஓரளவுக்கு கற்றலை உறுதிப்படுத்துகிறது. பிள்ளைகள் இடைநிற்றலை தவிர்க்கிறது” என குறிப்பிட்டார்.

குஜராத்தில் ஜனன் கிராமத்தில் கான்ஷியாம்பாய் என்ற ஆசிரியர், கிராம பஞ்சாயத்தின் ஒலிபெருக்கியை பயன்படுத்தி, அதன் மூலம் கதைகள், பாடல்கள் வழியாக பாடம் நடத்துகிறார். ஊரடங்கில் பிள்ளைகளை கையாளும் விதம்பற்றி பெற்றோர்களுக்கு வழிகாட்டுகிறார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “ இந்த சவாலான நேரத்தில் பிள்ளைகள் தங்களது பெற்றோர்களின் ஸ்மார்ட் போன்களை பறித்து, ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்க முடியாது. சிக்கலான கணக்கு பாடம் போன்றவற்றை ஒலிபெருக்கி வழியாக விளக்க முடியாதுதான். ஆனாலும் பிள்ளைகள் படிப்பு பாதித்துவிடாமல் பார்த்துக்கொள்ள இது உதவுகிறது” என்று குறிப்பிட்டார்.

இவர் பாடங்களில் சந்தேகம் இருந்தால் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு வந்து, அங்கு தன்னை சந்தித்து தேவையான விளக்கத்தை பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடு செய்துள்ளார்.

மராட்டிய மாநிலம், படோல் கிராமத்தில் ஸ்மார்ட் போன் வைத்துள்ள மாணவர்களை ஆசிரியர்கள் அடையாளம் கண்டு, அவர்கள் இடையே குழுக்களை உருவாக்கி உள்ளனர். அவர்களுடன் மற்ற மாணவர்களை இணைத்து விட்டிருக்கிறார்கள்.

இதுபற்றி ஷானோ தேவி என்ற ஆசிரியை பேசும்போது, “ இந்த ஏற்பாட்டால் ஸ்மார்ட் போன் வைத்துள்ள ஒரு மாணவர் மூலம் அருகில் உள்ள 10 மாணவர்கள் இப்போது ஆன்லைன் கல்வி கற்க முடிகிறது” என்று கூறினார். இவர் பாடங்களை ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களுக்கு அனுப்பி விடுகிறார். அதை பெறுகிற மாணவர்கள், ஸ்மார்ட் போன் இல்லாத மற்ற மாணவர்கள் கற்க உதவிக்கரம் நீட்டுகிறார்கள்.

உத்தரபிரதேசத்தில் கயிர் என்ற கிராமத்தில் இம்ரான்கான் என்ற விவசாயி, தனது 12 வயது மகனுக்கு மாலை நேரங்களில் அவரே பாடம் நடத்த தொடங்கி உள்ளார். கிராமத்தில் இணையதள தொடர்பு சரியாக கிடைக்காததால், அருகில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம் செல்கிறார். அங்கு வைத்து பாடங்களை அவர் செல்போனில் பதிவிறக்கம் செய்து விட்டு வீட்டுக்கு வந்து மகனுக்கு பாடம் நடத்துகிறார்.

இதுபற்றி அவர் கூறுகையில், “ என் மகன் என்ஜினீயர் ஆக வேண்டும் என்பதுதான் என் ஆசை. இந்த தொற்றுநோயால் அவனது படிப்பு பாழாகிவிடக்கூடாது. அதனால்தான் நானே பாடம் நடத்துகிறேன்” என தெரிவித்தார்.

அதே நேரத்தில் எத்தனை பெற்றோர் இப்படி தங்கள் பிள்ளைகளுக்கு ஆசிரியர்களாக மாறி வகுப்பு எடுக்கிறார்கள் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

பள்ளி, கல்லூரிகள் செயல்பட முடியாத சூழலில் ஆன்லைன் கல்வியை கற்க வேண்டிய சூழலில் அதற்கான வாய்ப்பு வசதிகளை நகரங்களில் மட்டுமின்றி கிராமங்களிலும் ஏற்படுத்தி தருகிற பொறுப்பு அரசுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் இருக்கிறது என்ற வல்லுனர்களின் கருத்து கவனத்தை ஈர்க்கிறது. அது சம்மந்தப்பட்டவர்களின் செவிகளுக்கு எட்ட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page