மோடியின் லடாக் பயணம் சீனாவின் ஆக்கிரமிப்பை முறியடிக்கும் இந்தியாவின் உறுதியை காட்டுகிறதுபாதுகாப்பு வல்லுனர் கருத்து

Spread the love

சீனாவின் ஆக்கிரமிப்பை முறியடிக்கும் இந்தியாவின் உறுதியை மோடியின் லடாக் பயணம் கோடிட்டுக் காட்டுவதாக பாதுகாப்பு வல்லுனர் பிரம்மா செல்லனே கூறியுள்ளார்.

புதுடெல்லி,

லடாக் எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவல் மற்றும் இந்திய வீரர்கள் 20 பேரை கொன்ற நிகழ்வுகளால் கடந்த 2 மாதங்களாக இந்திய-சீன எல்லை நெடுகிலும் பதற்றம் சூழ்ந்துள்ளது. இந்த பரபரப்பான சூழலில் பிரதமர் மோடி கடந்த 3-ந்தேதி லடாக்குக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். அங்கு எல்லை பகுதிகளை ஆய்வு செய்ததுடன், ராணுவ வீரர்கள் மத்தியில் உரையும் நிகழ்த்தினார். அப்போது ஆக்கிரமிப்பு சகாப்தம் முடிந்து விட்டது என பேசினார்.

பிரதமரின் இந்த திடீர் பயணம் நாடு முழுவதும் பாராட்டை பெற்று வருகிறது. அந்தவகையில் பிரபல பாதுகாப்பு நிபுணர்களில் ஒருவரான பிரம்மா செல்லனேயும் இந்த பயணத்தை வரவேற்று உள்ளார்.

இது தொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சீனாவின் ஆக்கிரமிப்பு மனநிலையால் இமயமலை எல்லையில் கடந்த சில வாரங்களாக நிலவி வரும் மோதலை முடிவுக்கு கொண்டு வரவும், சீனாவின் ஆக்கிரமிப்பை தடுக்கவும் இந்தியா மேற்கொண்ட முயற்சிகளுக்கு பிறகு, பிரதமரின் லடாக் பயணம் நாடு எதிர்கொள்ளும் போர் போன்ற சூழலில் கவனத்தை ஈர்த்து உள்ளது. பிரதமரின் இந்த பயணமும், அவர் ஆற்றிய உரையும் வீரர்களுக்கு மன உறுதியை அதிகரித்து உள்ளன. சீனாவின் ஆக்கிரமிப்பை முறியடிக்கும் இந்தியாவின் உறுதியை கோடிட்டுக் காட்டுவதாக இந்த பயணம் அமைந்துள்ளது.

ஆக்கிரமிப்பு குறித்து அவர் பேசிய உரை சர்வதேச அளவில் சீனா குறித்த கவலையை அதிகரித்து உள்ளது. குறிப்பாக ஒரே நேரத்தில் பல இடங்களில் தனது அத்துமீறலை நிகழ்த்தி வரும் ஜின்பிங்கின் ஆக்கிரமிப்புகளை எடுத்துரைத்து இருக்கிறது.

சீனாவின் பெயரை குறிப்பிடாமல் வலுவான செய்தி ஒன்றை அந்த நாட்டுக்கு பிரதமர் தெரிவித்து இருக்கிறார். 2 வாரங்களுக்கு முன்னால் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசியபோது அவரது உரை குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆனால் அதை லடாக் உரையில் திருத்திக்கொண்டார்.

ஒட்டுமொத்த உலகமும் கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் இந்த சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டுள்ள சீன அதிபர் ஜின்பிங், ஹாங்காங், ஜப்பானின் செங்காகு தீவு மற்றும் இந்தியாவின் பிராந்தியத்தில் அத்துமீறலை நடத்தி வருகிறார். கொரோனா விவகாரத்தில் சீனாவின் குற்றவாளி நிலையை ஜின்பிங்கின் நடவடிக்கைகள் திசை திருப்புகின்றன. அவரது சர்வாதிகாரப்போக்கு சர்வதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது.

ஜின்பிங் தன்னை ஜோசப் ஸ்டாலினின் வழித்தோன்றலாக கருதுவதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓபிரையன் சமீபத்தில் கூறியிருந்தார். ஆனால் அவரை ஹிட்லருடன்தான் சிலர் ஒப்பிடுகின்றனர். ஹிட்லரின் ஆக்கிரமிப்பு மனநிலைபோல ஜின்பிங்கும் பல வழிகளில் அத்துமீறி வருகின்றார். அந்தவகையில் அவரை ஜிட்லர் என்றுதான் சமூக வலைத்தளங்களில் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறு பிரம்மா செல்லனே கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page