நேபாளத்தின் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியில் பிளவு அபாயம் ஏற்பட்டுள்ளது. என்னை பதவியில் இருந்து நீக்க கட்சி உறுப்பினர்கள் சதி செய்வதாக பிரதமர் சர்மா ஒலி கூறினார்.

காத்மாண்டு,
நேபாளத்தில் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்டு கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அவர் கட்சி தலைவராகவும் இருக்கிறார். ஆனால், கட்சியின் செயல் தலைவராக உள்ள முன்னாள் பிரதமர் பிரசாந்தா தலைமையில் இன்னொரு கோஷ்டி செயல்படுகிறது.
மக்களின் எதிர்பார்ப்புகளை சர்மா ஒலி பூர்த்தி செய்யவில்லை என்று கூறி, அவரை பதவி விலகுமாறு பிரசாந்தா ஆதரவாளர்கள் வற்புறுத்தி வருகிறார்கள்.
குறிப்பாக, இந்தியாவுக்கு சொந்தமான லிபுலேக், காலாபனி, லிம்பியாதுரா ஆகிய பகுதிகளை சேர்த்து நேபாள அரசு புதிய வரைபடம் உருவாக்கியதை பிரசாந்தா ஆதரவாளர்கள் விரும்பவில்லை. இந்தியாவுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சர்மா ஒலி கூறி வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.
நேபாள கம்யூனிஸ்டு கட்சியில் சக்திவாய்ந்த 45 உறுப்பினர் நிலைக்குழுவில் பெரும்பாலானோர் பிரதமர் சர்மா ஒலிக்கு எதிராகவே உள்ளனர். அவர் கடந்த வாரம் நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்துக்கொண்டபோது, பிரச்சினை மேலும் தீவிரமானது.
இந்நிலையில், அதிபர் மாளிகையில் அதிபர் வித்யாதேவி பண்டாரியை பிரதமர் சர்மா ஒலி சந்தித்து பேசினார். பின்னர், அவர் தனது இல்லத்தில் அவசரமாக மந்திரிசபை கூட்டத்தை கூட்டினார்.
அதில் திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை சர்மா ஒலி தெரிவித்தார். அவர் பேசியதாவது:-
அதிபர் வித்யாதேவி பண்டாரிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வந்து பதவி நீக்கம் செய்ய நமது கட்சி உறுப்பினர்கள் சிலரே முயன்றனர். அதை அறிந்துதான் நான் நாடாளுமன்றத்தை முன்கூட்டியே ஒத்திவைத்தேன்.
என்னை பிரதமர் பதவியில் இருந்தும், கட்சி தலைவர் பதவியில் இருந்தும் நீக்க சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ஆனால் அதை நடக்கவிட மாட்டேன். நிலைக்குழு எடுக்கும் முடிவை ஏற்குமாறு என்னை வற்புறுத்த முடியாது. ஆளும் கட்சி, கடுமையான சிக்கலை சந்தித்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
நேபாள கம்யூனிஸ்டு கட்சி, இரண்டாக உடையும் அபாயத்தில் இருப்பதாக சர்மா ஒலி சூசகமாக தெரிவித்தார். மேலும், மந்திரிகள் தன்னை ஆதரிக்கிறார்களா? இல்லையா? என்பது பற்றியும் அவர் கேள்வி விடுத்தார்.
சர்மா ஒலியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கம்யூனிஸ்டு கட்சி நிலைக்குழு கூட்டம் கடந்த சனிக்கிழமை நடப்பதாக இருந்தது. ஆனால், கருத்து வேறுபாடுகளை தீர்க்க தலைமைக்கு கூடுதல் கால அவகாசம் அளிக்கும்வகையில், இக்கூட்டம் திங்கட்கிழமைக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது.
எனவே, சர்மா ஒலி பதவி தப்புமா என்பது இன்று நடக்கும் நிலைக்குழு கூட்டத்தில் தெரிய வரும்.