ஜனாதிபதி டிரம்பை கண்டித்தும் அமெரிக்க அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பி அமெரிக்காவின் தேசியக்கொடி தீவைத்து எரிப்பு!

Spread the love

அமெரிக்காவில் கொரோனா வைரசை தோற்கடிப்பது போல தீவிர இடதுசாரிகளும் தோற்கடிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி டிரம்ப் சூளுரைத்துள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் 244-வது சுதந்திர தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. அமெரிக்க மக்கள், வழக்கமாகச் சுதந்திர தின விழாவை வாணவேடிக்கைகளோடும், அமெரிக்க படைகளின் அணிவகுப்போடும் கோலாகலமாகக் கொண்டாடுவார்கள். நாட்டின் அனைத்து வீதிகளிலும் தேசியக்கொடியுடன் அவர்கள் வலம் வருவார்கள்.

ஆனால் தற்போது அமெரிக்காவை கொரோனா என்ற கொடிய வைரஸ் ஆட்டிப்படைத்து வருவதால் இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்கள் களையிழந்தன.

5 நிமிடங்கள் மட்டும் வாணவேடிக்கை, கடற்கரையில் சிறியளவிலான படைகளின் அணிவகுப்பு என எளிய முறையில் அமெரிக்காவின் சுதந்திர தினம் நடந்தது.

சுதந்திரதினத்தையொட்டி ஜனாதிபதி டிரம்ப் வெள்ளை மாளிகையின் முன்பு திறந்த வெளியில் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கொடிய கொரோனா வைரசும், தீவிர இடதுசாரியும் தோற்கடிக்கப்படும் என சூளுரைத்தார்.

கொரோனா அச்சுறுத்தலை மீறியும் வெள்ளை மாளிகை முன்பு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் முன்பு டிரம்ப் பேசியதாவது:-

சீனாவிலிருந்து வந்த வைரசால் பாதிக்கப்படும் வரை அமெரிக்கா மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வந்தது. தற்போது வைரஸ் தொடர்பான நடவடிக்கையிலும் நாம் நம்பமுடியாத அளவுக்குச் சிறப்பாகவே செயல்படுகிறோம்.

தடுப்பூசிகள், சிகிச்சைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்துத் தொடர்ந்து சோதனை செய்து வருகிறோம். உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவு அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதற்குக் காரணம் இங்கு எடுக்கப்படும் சோதனைகள்தான். நம் நாட்டில் கொரோனாவுக்கான மிகச் சிறந்த சோதனை வசதிகள் உள்ளன.

கொரோனாவுக்கு எதிரான உயிர்காக்கும் சிகிச்சை மற்றும் தடுப்பு மருந்து ஆகியவற்றை நாம் விரைவில் வெளியிடுவோம்.

கொரோனா வைரசை தோற்கடிப்பது போலவே தீவிர இடதுசாரிகள், மார்க்சிஸ்டுகள், அராஜக வாதிகள், கிளர்ச்சியாளர்கள், பல சந்தர்ப்பங்களில் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் தவறு செய்பவர்கள் ஆகியோரை தோற்கடிக்கும் முயற்சியிலும் நாம் ஈடுபட்டுள்ளோம்.

அமெரிக்காவில் இருக்கும் கோபமடைந்த ஒரு கும்பல் நம் சட்டங்களைக் கிழிக்கவோ, வரலாற்றை அழிக்கவோ, நம் குழந்தைகளுக்கு அறிவுரை கூறவோ, நமது சுதந்திரங்களை மிதிக்கவோ ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. நம் மரபு மற்றும் பழக்க வழக்கங்களை எப்போதும் பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனிடையே வெள்ளைமாளிகைக்கு வெளியே டிரம்ப் உரையாற்றிக் கொண்டிருந்தபோது அவரது உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கானோர் வெள்ளை மாளிகை முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர்.

புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களும், இனவெறிக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்தவர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

அவர்கள் ஜனாதிபதி டிரம்பை கண்டித்தும் அமெரிக்க அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் அமெரிக்காவின் தேசியக்கொடியை தீவைத்து எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page