தமிழகத்தை மட்டுமின்றி தேசத்தையே தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது சாத்தான்குளம் சம்பவம்.

சென்னை,
தமிழகத்தை மட்டுமின்றி தேசத்தையே தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது சாத்தான்குளம் சம்பவம். போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜும் அவரது மகன் பென்னிக்சும் கோவில்பட்டி கிளை சிறையில் மர்மமான முறையில் அடுத்தடுத்து இறந்து போனதே அதற்கு காரணம். அந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு போராட்டங்கள், கண்டனங்கள் என்று காவல்துறையினருக்கு எதிரான கிளர்ச்சி இன்னும் ஓயவில்லை.
இதன் விளைவாக மதுரை ஐகோர்ட்டு இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து பிறப்பித்த உத்தரவின் காரணமாக தற்போது சாத்தான்குளம் காவல் நிலையத்தின் ஆய்வாளர், 2 சப் இன்ஸ்பெக்டர்கள், ஒரு தலைமைகாவலர், ஒரு போலீஸ்காரர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். ஐகோர்ட்டு உத்தரவின்படி இந்த வழக்கில் புலன் விசாரணை நடத்தி வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் மீது இந்திய தண்டனை சட்டம் 302-வது பிரிவின் கீழ் கொலைவழக்கு பதிவு செய்து உள்ளனர்.
இத்தனை விபரீதத்திற்கும் மூல காரணம் சாத்தான்குளம் காவல் நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டரோ அல்லது ஏதாவது ஒரு காவலரோ தெரிந்தோ தெரியாமலோ செய்த விதிமுறை மீறல் தான். ஒரு சிறிய புள்ளியாக தொடங்கிய சட்ட மீறல் கொலையில் போய் முடிந்து உள்ளது.
கொரோனாவால் மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வரும் ஊரடங்கு காலத்தில் அரசு உத்தரவை மீறி செல்போன் கடையை திறந்து வைத்திருந்த தந்தை-மகனுக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்க போலீசாருக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்பது தான் தற்போது பொதுமக்களிடம் எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வி. இந்த கேள்விக்கு விடை மற்றும் சாத்தான்குளம் சம்பவம் எப்படி நடந்து இருக்கும் என்பது பற்றிய உண்மைகள் எல்லாம் இந்த வழக்கின் விசாரணை முடிவில் முழுமையாக வெளியில் வரும் என்பதில் ஐயமில்லை.
அதற்கு முன்பாக பொதுவாக போலீசார் ஒரு வழக்கில் விசாரணை நடத்தும்போது பின்பற்றவேண்டிய சட்ட விதிமுறைகள், கைது நடவடிக்கை, அதன் பின்னர் சிறையில் அடைக்கும் வரை என்ன நடைமுறைகள் உள்ளன என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காகவும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் விளக்கியுள்ளார் தமிழக காவல் துறையில் துணை சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்ற ராமச்சந்திரன். அவர் கூறியதாவது:-
ஜனநாயகத்தின் நான்கு தூண்களிலும் முதலிடத்தில் இருப்பது நீதித்துறை. நமது நாட்டில் நடப்பது சட்டத்திலான ஆட்சி. நாட்டில் அமல்படுத்தப்பட்டு உள்ள சட்டத்தை பாதுகாப்பதும், அதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும் தான் காவல் துறையின் முக்கியமான பணி என்பதால் சாதாரண காவலர் முதல் அதிகாரிகள் வரையிலானவர்களுக்கும் அவர்கள் பணியில் சேர்ந்த உடன் போலீஸ் பயிற்சி பள்ளியில் சட்டம் சார்ந்த வகுப்புகளை அதிக அளவில் நடத்தப்படுவது வழக்கம்.
பயிற்சி முடித்து பணியில் சேர்ந்த பின்னர் பயிற்சி பள்ளியில் தான் கற்றதை நினைவு கூர்ந்து பணியாற்ற வேண்டியது ஒவ்வொரு காவலரின் கடமையாகும். போலீசார் வழக்குகளை எப்படி விசாரிக்க வேண்டும், ஒரு சம்பவம் அல்லது குற்ற நிகழ்வு தொடர்பாக சம்பந்தப்பட்ட நபரிடம் எப்படி விசாரணை நடத்தவேண்டும், கைது செய்யக்கூடிய முகாந்திரம் ஏற்பட்டால் என்னென்ன விதிமுறைகளை பின்பற்றவேண்டும் என உச்ச நீதிமன்றம் தெளிவாக கட்டளைகளை பிறப்பித்து இருக்கிறது. இந்த கட்டளைகளில் கால சூழலுக்கு ஏற்ப சில திருத்தங்கள் செய்யப்பட்டாலும் அதன் அடிப்படை ஒன்றே.
அதன்படி ஒரு புகார் தொடர்பான விசாரணையின்போது குற்றம்சாட்டப்பட்டவரை அடித்து விசாரிக்க எந்த சட்டத்திலும் இடம் இல்லை. புகார் தொடர்பாக ஒருவரை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தலாம். இதற்கு சட்டம் அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் அந்த நபரை கைது செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டால் கைது நடவடிக்கை பற்றிய தகவலை உடனடியாக அவரது குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவருக்கு தெரிவிக்கவேண்டும். சட்ட விதிமுறைகளில் இது கட்டாயமானது.
இந்த குற்றத்திற்காக உங்களது மகனை அல்லது தந்தையை அல்லது சகோதரனை கைது செய்து இருக்கிறோம் என்பதை தெரிவித்து விட்டு நீதிமன்றத்தில் ‘ரிமாண்ட்’ செய்ய போகிறோம் என்பதையும் கூறவேண்டும். ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரை 24 மணி நேரத்திற்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்பது சட்ட விதி.
எனவே காவல் நிலையத்தில் வழக்கமாக கையாளப்படும் ஆவணங்களில் பதிவு செய்து விட்டு கைதியின் அங்க மச்ச அடையாளங்களை குறித்துக்கொண்டு ஒப்புதல் வாக்குமூலம் பெற்ற மகஜர் ஆகியவற்றுடன் ரிமாண்ட் ரிப்போர்ட் தயார் செய்யவேண்டும். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட குற்றவியல் நடுவர் முன் ஆஜர்படுத்த வேண்டும்.
அப்படி ஆஜர்படுத்தும்போது கைதிக்கு காயம் ஏதாவது இருந்தால் அதனை ரிமாண்ட் ரிப்போர்ட்டில் குறிப்பிடவேண்டும், அதற்கு சிகிச்சை அளிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் மாஜிஸ்திரேட் அனுமதியுடன் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கவேண்டும். அவ்வாறு சிகிச்சை அளித்த பிறகு கைதி சிறையில் அடைக்க உடல் தகுதியுடன் உள்ளார் என்று அரசு டாக்டரிடம் சான்றிதழ் பெற வேண்டும்.
கைதியை சிறையில் அடைப்பதற்கு குற்றவியல் நடுவர் உத்தரவிட்டுவிட்டார் என்றால் உடனடியாக தகுந்த பாதுகாப்புடன் கைதியை சிறையில் அடைப்பதற்கான ஆவணங்களை தயார் செய்து உரிய காவலுடன் அனுப்பி வைக்க வேண்டும்.
அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட வழக்கின் குற்ற எண், அதன் தன்மை, கைதி பற்றிய விவர சுருக்கம் ஆகிய விவரங்களை மாநகர பகுதி என்றால் காவல் ஆணையரகத்திற்கும், புறநகர் பகுதி என்றால் மாவட்ட தனிப்பிரிவிற்கும் அனுப்பி வைக்க வேண்டும்.
குற்றவியல் நடுவர் உத்தரவிட்ட பின்னரும் அந்த கைதியை சம்பந்தப்பட்ட சிறையில் அடைப்பது வரையிலான பொறுப்பு விசாரணை அதிகாரிக்கு தான் உள்ளது. எனவே கைதி தப்பிவிடாதபடி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொண்டு சிறைக்கு அனுப்பி சிறையில் அடைக்கப்பட்டதற்கான தகவல் வந்து சேரும் வரை விசாரணை அதிகாரி விழிப்புடன் இருக்கவேண்டும்.
இவை அனைத்தும் பொதுவான சட்ட நடைமுறைகள்.பொதுமக்களும் சட்டத்தை அறிந்து கொள்ளவேண்டும். சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்ற கட்டளைகள் அடங்கிய நல்ல புத்தகங்களை வாங்கி படிக்கவேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.