காவலர்கள் எப்படி இருக்க வேண்டும்?

Spread the love

காவலர்கள் எப்படி இருக்க வேண்டும்?

சென்னை,

காவல்துறை என்பது பொதுமக்களுக்கு நண்பனாக இருக்க வேண்டும். காவலர்கள் உங்கள் நண்பர்கள் என்று வெறும் வார்த்தைகளால் சொல்லிக் கொண்டால் போதாது.

காவல்துறை என்பது பொதுமக்களுக்கு நண்பனாக இருக்க வேண்டும். காவலர்கள் உங்கள் நண்பர்கள் என்று வெறும் வார்த்தைகளால் சொல்லிக் கொண்டால் போதாது. மக்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும், மக்களின் சேவகர்களாகவும், பாதுகாவலர்களாகவும் இருக்க வேண்டும். சாத்தான்குளம் சம்பவம் நிகழ காரணமானவர்கள்போல் இருந்துவிடக்கூடாது. அப்படி இருந்துவிட்டால் காவல்துறை மீது விழும் கரும்புள்ளிகள் என்றென்றும் மாறாமல் போய்விடும்.

காவல்துறையில் வேலைக்கு சேருபவர்கள் அது அரசாங்க வேலை, குறித்த தேதியில் மாதாமாதம் சம்பளம் கிடைத்துவிடும் என்ற நோக்கத்துடன் சேர்ந்தால் அவர்களின் பணி மக்களுக்கு பயனில்லாமல் போய்விடும். அரசுத்துறைகளில் மற்ற துறைகளைப்போல் காவல்துறை இல்லை. அதில் பணியாற்ற கண்ணியம், கட்டுப்பாடு, நேர்மை, ஒழுக்கம் என அனைத்து விதத்திலும் நற்பண்புகள் கொண்டிருக்க வேண்டும். இவையனைத்தும் புதிதாக சேரும் காவலர்களுக்கு வந்துவிடுவதில்லை.

இதற்காகவே, தமிழக காவல்துறை சார்பில் பணியில் சேரும் காவலர்களுக்கு அவர்கள் பணியில் எப்படி இருக்க வேண்டும், பொதுமக்களிடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், வழக்குகளை கையாளும் முறைகள், குற்றவாளிகளை கையாளும் வழிமுறைகள் என்று பல்வேறு அம்சங்கள் கற்றுத்தரப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு காவலர்களுக்கும் தனியாக கையேடுகள் வழங்கப்படுகின்றன. பயிற்சி காலகட்டத்திலும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

காவல்துறையில் பணியாற்றுபவர்கள் எப்படி இருக்கவேண்டும்? என்று காவலர் கையேடு சொல்லும் அம்சங்களில் சில…

* ஒவ்வொரு காவலர்களும், அதிகாரிகளும் பொதுமக்களிடையே மிகுந்த மரியாதையுடனும், பண்புடனும், அன்புடனும் நடந்து கொள்ள வேண்டும். நல்லோர்க்கு நண்பர்களாகவும், தீயோர்க்கு சிம்ம சொப்பனமாகவும் விளங்க வேண்டும்.

* பொதுமக்கள் அனைவரும் குற்றவாளிகள் அல்ல. குற்றம் புரிந்தோர் அனைவரும் கொடுமையானவர்கள் அல்ல, சந்தர்ப்பம், சூழ்நிலை காரணமாக குற்றம் புரிவோர் நிறையபேர். ஆகையால் காவலர்கள் எல்லோரிடத்திலும் கனிவுடன் நடக்க வேண்டும்.

* கைது செய்யப்பட்ட எவரையும் தரக்குறைவாக நடத்தக்கூடாது. அவர்களும் மனிதர்கள்தான் என்று நினைவில் கொள்ள வேண்டும்.

* காவலர்கள் பொதுமக்களின் ஊழியர்கள் என்பதை எக்காலத்திலும் மறந்துவிடக்கூடாது. ரோந்து செல்லும்போது போகும் வழியில் உள்ள பொதுமக்களிடம் நன்றாக பழக வேண்டும். பொதுமக்கள் பிரதிநிதிகளிடம் மிக்க மரியாதையுடனும், அவர்கள் கூறும் குறைகளை அக்கறையுடனும் கேட்டு சட்டத்துக்கு உட்பட்டு ஆவன செய்ய வேண்டும்.

* குற்றம் சாட்டப்பட்டவரையோ, சந்தேக நபரையோ துன்புறுத்தல் கூடாது. அறிவியல், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி துப்பு துலக்கவேண்டும்.

* உயர்ந்தவர், தாழ்ந்தவர், செல்வந்தர், ஏழை என வேற்றுமை பாராமல் சேவை புரிய வேண்டும். காவல்துறையினர் தாங்களும் பொதுமக்களை சேர்ந்தவர்கள்தான் என்பதை உணர வேண்டும். ஒரேயொரு வேற்றுமை என்னவெனில், தாங்கள் பொதுமக்களின் நலனுக்காக அவர்கள் ஒவ்வொருவரும் ஆற்றவேண்டிய கடமைகளை முழுநேர ஊழியர்களாக இருந்து செயலாற்ற நியமிக்கப்பட்டவர்கள்தான் என்பதேயாகும்.

* காவல்துறையினர் கடமைக்கு பின்தான் தன்னலம் பற்றி சிந்திக்க வேண்டும். எந்த ஆபத்தான அல்லது ஆத்திரமூட்டக்கூடிய சூழ்நிலையிலும் அமைதியுடனும், நிதானத்துடனும் இருக்க வேண்டும். நன்னடத்தையுடன் மக்களின் நம்பிக்கையையும் பெற்றிருக்க வேண்டும்.

* உயர்ந்த நேர்மைதான் காவல்துறையின் கவுரவத்திற்கு அடிப்படை. அதை உணர்ந்து காவலர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் தூய்மையோடும், தன்னடக்கத்தோடும் நடந்து கொள்ள வேண்டும். மேலும் தங்கள் தனி வாழ்க்கையிலும், அலுவலர் முறையிலும் எண்ணத்தாலும், செயலாலும் உண்மையோடும், நேர்மையோடும் நடந்து கொள்ள வேண்டும்.

* நல்ல கட்டுப்பாடு, கீழ்படிதல், நம்பிக்கை, எப்பொழுதும் நல்ல பயிற்சியுடனும் தயார் நிலையில் இருத்தல், இவற்றின் மூலம் தான் காவல்துறையினர் நிர்வாகத்துக்கும் நாட்டுக்கும் அதிக பயன் உள்ளவர்களாக விளங்க முடியும் என்பதை உணரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page