‘ஆன்லைன்’ வகுப்புகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வருகிற 15-ந்தேதிக்குள் வெளியிடப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல் தெரிவித்து உள்ளது.

சென்னை,
கொரோனா ஊரடங்கினால் சில பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு ‘ஆன்லைன்’ மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் ‘ஆன்லைன்’ வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்க முயற்சிக்கும் போது, ஆபாச இணையதளங்கள் குறுக்கிடுவதால், மாணவர்களின் கவனம் திசை மாறி செல்லும் அபாயம் உள்ளது. இதை தடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் சரண்யா என்பவர் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
அதேபோல சென்னை கொடுங்கையூரை சேர்ந்த வக்கீல் விமல்மோகன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘மாணவர்களுக்கு நீண்ட நேரம் ‘ஆன்லைன்’ மூலம் வகுப்புகள் நடத்தப்படுவதால், அவர்களது விழித்திரை பாதிக்கப்படும். எனவே 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ‘ஆன்லைன்’ வகுப்புகள் நடத்த தடை விதிக்க வேண்டும்‘ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ‘ஆன்லைன்’ வகுப்புகளினால் மாணவர்களுடைய விழித்திரை பாதிக்கப்படுமா? என்பது குறித்து சென்னை அரசு கண் ஆஸ்பத்திரி ‘டீன்’ விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பிரபாகரன், வக்கீல் ஜே.ரவீந்திரன் ஆகியோர், ‘அரசு கண் ஆஸ்பத்திரி டீன்’ இன்னும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை‘ என்று கூறினர்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.சங்கரநாராயணன், “ஆன்லைன்” வகுப்புகளை ஒழுங்குப்படுத்தும் வழிகாட்டு நெறிமுறைகள் வருகிற 15-ந்தேதிக்குள் மத்திய அரசு வெளியிடும்‘ என்றார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற 20-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.