சாத்தான்குளம் வழக்கில் கைதான போலீஸ் இன்ஸ்பெக்டர் தப்பிச்செல்ல பயன்படுத்திய காரின் உரிமையாளரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.

தூத்துக்குடி,
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இறந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 5 பேரை கைது செய்தனர்.
இதில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஒரு காரில் தப்பி செல்ல முயன்றபோது கங்கைகொண்டான் சோதனை சாவடியில் வைத்து போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர் வந்த காரையும் பறிமுதல் செய்து கங்கைகொண்டான் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைத்து இருந்தனர்.
இதனை அறிந்த கார் உரிமையாளரான சென்னை மேற்கு மாவட்ட பா.ஜனதா அமைப்புசாரா பிரிவு செயலாளர் சுரேஷ்குமார் என்பவர், பிடிபட்ட கார் தன்னுடையது என்று போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சுரேஷ்குமாரை தொடர்பு கொண்டு உரிய ஆவணங்களுடன் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகுமாறு தெரிவித்தனர்.
அதன்பேரில், சுரேஷ்குமார் நேற்று தூத்துக்குடிக்கு வந்தார். அவர் காலையில் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் விசாரணை நடத்தினார்.
அப்போது, சுரேஷ்குமார் காருக்கான ஆவணங்கள், தன்னை அடையாளப்படுத்தக்கூடிய ஆவணங்கள் உள்ளிட்டவைகளை சமர்ப்பித்தார். அந்த ஆவணங்களை ஆய்வு செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரை அனுப்பி வைத்து, காரையும் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தனர்.
இந்த நிலையில் சாத்தான்குளத்தில் மீண்டும் விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் தன்னார்வலர்கள், போலீஸ்காரர்களிடமும் நேற்று விசாரணை நடத்தினார்கள். பென்னிக்ஸ் நண்பர்களும் 2-வது நாளாக ஆஜரானார்கள்.
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சமூகவலைத்தளத்தில் வெளியான ஆடியோவில் பேசிய 2 தன்னார்வலர்களிடமும் விசாரணை நடந்தது.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் சிறையில் உள்ள கைதிகள், தங்களது குடும்பத்தினரிடம் செல்போனில் 5 நிமிடம் வரையிலும் பேச அனுமதிக்கப்படுகிறது. அதன்படி பேரூரணி சிறையில் இருந்தபோது, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தன்னுடைய உறவினர்களிடம் செல்போனில் பேசியதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அப்போது அவர், கைதான மற்ற போலீசாரை காப்பாற்றும் வகையில், அவர்களுக்கு பெரிய பின்புலம் உள்ளது. நான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். எனவே, திறமையான வக்கீலை நியமித்து என்னை காப்பாற்றுங்கள் என்று பாலகிருஷ்ணன் புலம்பியதாக கூறப்படுகிறது.