சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: சம்பவ இடங்களில் சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் மீண்டும் ஆய்வு

Spread the love

சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கு தொடர்பாக சம்பவ இடங்களில் சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் மீண்டும் ஆய்வு செய்தார். அப்போது பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்பட்டன.

சாத்தான்குளம்,

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

நேற்று முன்தினம் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய 10 போலீஸ்காரர்களிடமும் இரவு வரை விசாரணை நடந்தது. அதே போன்று கொரோனா தடுப்பு பணியாளர்களான தன்னார்வலர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் மீண்டும் சாத்தான்குளத்துக்கு நேரில் சென்றார். அவர் சம்பவம் நடந்த இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் கடைகள் இருந்த பகுதியை பார்வையிட்டார். அதன் அருகில் உள்ள கடைக்காரர்களிடம் விசாரணை நடத்தினார். அங்கிருந்து போலீஸ் நிலையத்துக்கு எவ்வளவு நேரத்தில் சென்றடைய முடியும், எத்தனை மணிக்கு ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் நிலையத்துக்கு சென்றனர் என்பது பற்றி விசாரித்தார்.

சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் சாட்சிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை எந்தெந்த இடங்களில் வைத்து அடித்தார்கள், ரத்தக்கறை படிந்த மேஜை, லத்தி வைக்கப்பட்டு இருந்த இடங்களையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து அருகே உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு ஐ.ஜி. சங்கர் நடந்தே சென்றார். ஆஸ்பத்திரியில் எந்த அறையில் வைத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது, எவ்வளவு நேரம் சிகிச்சை அளிக்கப்பட்டது என்ற விவரங்களையும் கேட்டறிந்தார்.

அந்த பகுதியில் வேறு ஏதேனும் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளதா, அப்போது ஆஸ்பத்திரியில் வேறு யாரேனும் இருந்தார்களா? என்பது உள்ளிட்ட விவரங்களை சேகரித்து உள்ளார். இரவில் நடந்த இந்த ஆய்வில் பல்வேறு தகவல்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேகரித்து சென்றதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் போலீஸ் நண்பர்கள் குழுவினருக்கும், கொரோனா தடுப்பு தன்னார்வலர்களுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அவர்களையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து சாத்தான்குளம் பகுதியில் கொரோனா தடுப்பு தன்னார்வலர்களின் செயல்பாடுகள் எப்படி இருந்தது? என்பது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒவ்வொரு குழுவாக பிரிந்து சாத்தான்குளம் பகுதியில் உள்ள தன்னார்வலர்களின் கிராமங்களுக்கு சென்று அவர்களின் செயல்பாடுகள் குறித்து விசாரித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page