நாடு முழுவதும் நிலவி வரும் கொரோனா நெருக்கடி காரணமாக மாணவர்களின் கல்வியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

புதுடெல்லி,
நாடு முழுவதும் நிலவி வரும் கொரோனா நெருக்கடி காரணமாக மாணவர்களின் கல்வியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கல்வி நிறுவனங்கள் பல மாதங்களாக திறக்க முடியாமல் மூடியே கிடக்கின்றன. இதனால் மாணவர்கள் படிக்க முடியாமல் அவதியடைந்து உள்ளனர்.
இந்த நெருக்கடி சூழலை கருத்தில் கொண்டு தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் (என்.ஐ.டி.) மற்றும் மத்திய அரசின் நிதியுதவியில் இயங்கும் பிற தொழில்நுட்ப நிறுவனங்களில் சேர விரும்பும் மாணவர்களுக்கான தகுதியில் மத்திய அரசின் இருக்கை ஒதுக்கீட்டு வாரியம் சலுகை வழங்குவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.
அதன்படி, ‘2020-ம் ஆண்டின் ஜே.இ.இ. பிரதான தேர்வில் தகுதி பெறும் மாணவர்கள், 12-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலே போதுமானது’ என அவர் கூறியுள்ளார்.
வழக்கமாக இந்த நிறுவனங்களில் சேர்வதற்கு, ஜே.இ.இ. பிரதான தேர்வில் வெற்றி பெறுவதுடன், 12-ம் வகுப்பில் 75 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.