இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் சாதனை அளவாக ஒரே நாளில் 36 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் தொற்றில் இருந்து மீட்கப்பட்டு, வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இறப்புவீதமும் 2.31 சதவீதமாக குறைந்தது.

புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் என்ற கொடிய அரக்கனின் பிடியில் சிக்குவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் சிகிச்சைக்கு பின்னர் 36 ஆயிரத்து 145 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீட்கப்பட்டனர். அவர் கள் நிம்மதியுடன் வீடுகளுக்கு திரும்பினர்.
இதைத் தொடர்ந்து இந்தியாவில் கொரோனாவின் பிடியில் இருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 85 ஆயிரத்து 576 ஆக உயர்ந்தது.
தற்போது குணம் அடைந்தோர் விகிதாசாரம், 63.92 சதவீதமாக உயர்ந்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 67 ஆயிரத்து 882 ஆகும். இந்த வகையில், சிகிச்சை பெறுவோரை காட்டிலும் குணம் அடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 1.89 மடங்கு அதிகம். எண்ணிக்கையில் இது 4 லட்சத்து 17 ஆயிரத்து 694 ஆக இருக்கிறது.
இதே போன்று கொரோனா பரிசோதனையில் சாதனையாக ஒரே நாளில் 4 லட்சத்து 42 ஆயிரத்து 263 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன. விகிதாசாரப்படி பார்த்தால் இது 10 லட்சத்துக்கு 11 ஆயிரத்து 805 என்ற அளவில் அமைந்துள்ளது. இதுவரை பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1 கோடியே 62 லட்சத்து 91 ஆயிரத்து 331 ஆகும்.
அரசு பரிசோதனைக்கூடங்களில் முதல் முறையாக நேற்று ஒரு நாளில் 3 லட்சத்து 62 ஆயிரத்து 153 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன. தனியார் ஆய்வுக்கூடங்களில் சோதிக்கப்பட்ட மாதிரிகள் எண்ணிக்கை 79 ஆயிரத்து 878 ஆகும்.
இந்த புள்ளி விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டது.
இதற்கிடையே பரிசோதனைகளை பெருக்கவும், தடமறிதலை தீவிரப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களை உடனே கண்டறிந்து சிகிச்சை அளிக்கவும் அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றினால் இறப்போர் விகிதம் தற்போது 2.31 சதவீதமாக குறைந்துள்ளது.
பரிசோதனையை அதிகரித்து இருப்பதாலும், ஆஸ்பத்திரி கட்டமைப்புகளை அரசு மற்றும் தனியார் துறை கூட்டு முயற்சிகளால் பெருக்கி இருப்பதாலும், விரைவாக நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு, தரமான சிகிச்சை அளிக்கப்படுவதாலும் இறப்புவீதம் தொடர்ந்து குறைந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
உலகளவில் குறைவான இறப்பு வீதத்தை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குவது குறிப்பிடத்தக்கது.