சீனாவில் கொரோனா தடுப்பூசி ஆண்டு இறுதியில் விற்பனைக்கு தயார் – அரசு மருந்து நிறுவனம் அறிவிப்பு

Spread the love

சீனாவில் இந்த ஆண்டு இறுதியில் தடுப்பூசி விற்பனைக்கு தயாராகிவிடும் என அரசு மருந்து நிறுவனம் அறிவித்துள்ளது.


பீஜிங்,

இன்றைக்கு உலக நாடுகளின் பொது எதிரியாக மாறி விட்டிருக்கிற கொரோனா வைரஸ் தொற்றினை தடுத்து நிறுத்துவதற்கு பல நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இப்படி சுமார் 165 தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

 

ஆனால் எல்லா நாடுகளையும் முந்திக்கொண்டு, தாங்கள் உலகின் முதல் தடுப்பூசியை உருவாக்கி விட்டதாகவும், அதை பதிவு செய்துள்ளதாகவும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த 11-ந் தேதி அதிரடி அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் ‘ஸ்புட்னிக்-5’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, 3-வது கட்ட மருத்துவ பரிசோதனையை கடக்கவில்லை என்றும், ரஷியா தடுப்பூசியில் அவசரம் காட்டுவதாகவும், உண்மை தகவல்களை வெளியிடுவதில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த தடுப்பூசி பற்றிய கூடுதல் தகவல்களை ரஷியாவிடம் கேட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

இந்த நிலையில் ரஷியாவுக்கு போட்டியாக சீனாவும் களத்தில் குதிக்கிறது. அந்த வகையில் சீன அரசு மருந்து நிறுவனமான சினோபார்மும் இந்த ஆண்டு இறுதிக்குள் தங்களது தடுப்பூசி விற்பனைக்கு தயாராக கிடைக்கும் என்று நேற்று அறிவித்து புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையொட்டி அந்த நிறுவனத்தின் தலைவரான லியு ஜிங்ஜென் கூறியதாவது:-

எங்கள் நிறுவனத்தின் தடுப்பூசி நடப்பாண்டு இறுதியில் விற்பனைக்கு வந்து விடும். இந்த தடுப்பூசியின் விலை 140 டாலருக்கு குறைவாக (சுமார் ரூ.10,500) இருக்கும். இதை 2 ‘டோஸ்’ போட்டுக்கொள்ள வேண்டியது வரும். முதல் ‘டோஸ்’ போட்டு, 28 நாளுக்கு பின்னர் அடுத்த ‘டோஸ்’ போட வேண்டும். முக்கிய நகரங்களில் மாணவர்களும், தொழிலாளர்களும் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் குறைந்த மக்கள் தொகை கொண்ட கிராமப்புறங்களில் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ளத்தேவையில்லை.

எங்கள் நிறுவனம், 2 தடுப்பூசிகளை தயாரித்து பரிசோதித்து வருகிறது. இந்த நிறுவனம், ஆண்டுக்கு 22 கோடி தடுப்பூசிகளை தயாரித்து வழங்கும் ஆற்றலை கொண்டுள்ளது. நானும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே சீன ஆராய்ச்சியாளர்களும், நிர்வாகிகளும் தற்போது பரிசோதனையில் உள்ள தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் அறிவியல் வட்டாரங்களில் நெறிமுறை சார்ந்த கேள்விகளையும் இது எழுப்பி இருக்கிறது.

இந்தியாவிலும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேக்கா மருந்து நிறுவனமும் கூட்டாக தயாரித்துள்ள தடுப்பூசியான கோவிஷீல்டு, உள்நாட்டில் புனே பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோவேக்சின், ஆமதாபாத் ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் ஜைகோவ் டி ஆகிய 3 தடுப்பூசிகளும் மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்கப்பட்டு வருகின்றன.

இந்த தடுப்பூசிகள், மிகுந்த நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page