ரெயில்வே, வங்கி உள்ளிட்ட மத்திய அரசு வேலைகளுக்கு பணியாளர்களை தேர்வு செய்ய புதிய அமைப்புக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

புதுடெல்லி,
தற்போது, வங்கிப்பணி, ரெயில்வே பணி உள்பட மத்திய அரசின் பல்வேறு துறை பணிகளுக்கு அவற்றுக்கென உள்ள தேர்வு அமைப்புகள் தனித்தனியாக தேர்வு நடத்துகின்றன. வேலை தேடுபவர்களும் ஒவ்வொரு தேர்வுக்கும் தனித்தனியாக விண்ணப்பித்து வருகிறார்கள். தேர்வு கட்டணத்தையும் தனித்தனியாக செலுத்துவதால், அவர்களுக்கு செலவு அதிகரிக்கிறது. ஒன்றுக்கு மேற்பட்ட தேர்வுகளை எழுத வேண்டி இருப்பதால், பயண செலவு ஏற்படுவதுடன், நேரமும் வீணாகிறது.
இதை கருத்தில்கொண்டு, பல்வேறு மத்திய அரசு பணிகளுக்கு பொதுவான ஒரே தகுதி தேர்வு மூலம் ஆள் எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மதிப்பெண் அடிப்படையில், மத்திய அரசு துறைகள் தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளும்.
இந்த தகுதி தேர்வு நடத்துவதற்காக, தேசிய பணியாளர் தேர்வு முகமை (என்.ஆர்.ஏ.) அமைக்கப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில், தேசிய பணியாளர் தேர்வு முகமையை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கூட்டம் முடிவடைந்த பிறகு, மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க முடிவு. வேலை தேடுபவர்கள் பொதுவான ஒரே தகுதி தேர்வு எழுதினால் போதும். இதனால், எண்ணற்ற தேர்வுகள் எழுதுவதால் ஏற்படும் பண செலவையும், நேர விரயத்தையும் மிச்சப்படுத்தலாம். பல ஆண்டுகளாக, இளைஞர்கள் இந்த கோரிக்கையை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் நிருபர்களிடம் கூறியதாவது:-
இது இந்திய வரலாற்றில் ஒரு புரட்சிகரமான, முக்கியமான சீர்திருத்தம். ஆள் தேர்வை இலகுவாக்குவதுடன், சமூகத்தின் நலிந்த பிரிவினராக கருதப்படுபவர்களின் வாழ்க்கையையும் இலகுவாக்கும். மேலும், ஒன்றுக்கு மேற்பட்ட தேர்வுகளை எழுதுவதற்காக பெண்களும், ஏழைகளும் நீண்ட தூரம் பயணிப்பதையும் இந்த முடிவு தவிர்க்கும். இதனால், கோடிக்கணக்கான விண்ணப்பதாரர்கள் பலன் அடைவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அரசின் குரூப் பி, குரூப் சி (தொழில்நுட்பம் சாராதது) பணியிடங்களுக்கு தேசிய பணியாளர் தேர்வு முகமை, பொது தகுதி தேர்வை நடத்தும். இதில் பெறும் மதிப்பெண்களை, தற்போதைக்கு ரெயில்வே, வங்கி உள்ளிட்ட 3 பெரிய தேர்வாணையங்கள் மட்டும் பயன்படுத்திக் கொள்ளும். அடுத்தடுத்து மற்ற தேர்வு அமைப்புகளும் இதை பயன்படுத்திக்கொள்ளும். இனிவரும் காலங்களில், மத்திய, மாநில, யூனியன் பிரதேச தேர்வாணையங்கள், பொதுத்துறை தேர்வாணையங்கள், தனியார் துறை ஆகியவற்றுக்கும் இந்த மதிப்பெண் பகிர்ந்து கொள்ளப்படும். அதன்மூலம், அந்த தேர்வாணையங்களுக்கு செலவும், நேரமும் மிச்சமாகும். தேசிய பணியாளர் தேர்வு முகமையின் தலைமையகம் டெல்லியில் செயல்படும். அரசு செயலாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி ஒருவர், அதன் தலைவராக செயல்படுவார்.
ரெயில்வே, நிதி அமைச்சகங்கள், பணியாளர் தேர்வாணையம், ரெயில்வே பணியாளர் தேர்வாணையம், வங்கி ஊழியர் தேர்வு அமைப்பு ஆகியவற்றை சேர்ந்த பிரதிநிதிகள் அதில் இடம்பெறுவார்கள். இந்த முகமை அமைப்பதற்கு மத்திய அரசு ரூ.1,517 கோடியே 57 லட்சத்தை ஒதுக்கி உள்ளது. அடுத்த 3 ஆண்டுகளுக்கு இத்தொகை பயன்படுத்திக் கொள்ளப்படும். 117 தேர்வு மாவட்டங்களில், தேர்வு கட்டமைப்புகளை உருவாக்கவும் இத்தொகை பயன்படுத்தப்படும்.
தகுதி தேர்வு நடத்துவதற்கு, முதல்கட்டமாக, நாடு முழுவதும் ஆயிரம் தேர்வு மையங்கள் உருவாக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு மையம் இருப்பது உறுதி செய்யப்படும். இதன்மூலம் எந்த விண்ணப்பதாரரும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வேண்டி இருக்காது. இந்த தகவல்கள், மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.
ஜெய்ப்பூர், கவுகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களை அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடும் திட்டத்துக்கும் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த ஏலத்தில், பொது-தனியார் கூட்டு அடிப்படையில், லக்னோ, ஆமதாபாத், மங்களூரு, ஜெய்ப்பூர், கவுகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய 6 விமான நிலையங்களை இயக்குவதற்கான குத்தகை உரிமையை அதானி எண்டர்பிரைசஸ் பெற்றது.
ஆமதாபாத், மங்களூரு, லக்னோ ஆகிய 3 விமான நிலையங்களின் குத்தகை உரிமையை அளிக்க கடந்த ஆண்டு ஜூலை மாதம் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்து விட்டது. மீதி உள்ள 3 விமான நிலையங்களின் குத்தகைக்கு நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மாநில மின்வினியோக நிறுவனங்களுக்கு அவற்றின் பணி மூலதன உச்சவரம்புக்கு மேல் மின்சார நிதி கழகம் கடன் வழங்குவதற்கு ஒருதடவை மட்டும் தளர்வு அளிக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
கொரோனா காரணமாக, பொதுமக்கள் மின்கட்டணம் செலுத்த இயலாததால் நிதி தட்டுப்பாட்டில் சிக்கி உள்ள மாநில மின்வினியோக நிறுவனங்களுக்கு ரூ.90 ஆயிரம் கோடி மூலதன உதவியை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த மே மாதம் அறிவித்தார். இதன் ஒரு பகுதியாக, மாநில மின்வினியோக நிறுவனங்களுக்கு ‘உதய்’ திட்டத்தின்கீழ் கடன் வழங்கப்படுகிறது. அந்த விதிமுறைகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால், மின்வினியோக நிறுவனங்களில் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.
10 சதவீத பிழிதிறன் கொண்ட கரும்பின் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.10 உயர்த்தி, ரூ.285 ஆக நிர்ணயிக்க மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. வருகிற அக்டோபர் முதல் அடுத்த ஆண்டு செப்டம்பர் வரையிலான சர்க்கரை பருவத்தின்போது, இந்த விலையை கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்கும்.