இந்தியாவில் ஒரே நாளில் 69 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. மொத்த பாதிப்பு, 29 லட்சத்தை தாண்டியது.

புதுடெல்லி,
சீனாவில் கடந்த டிசம்பரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று, உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது கோர முகத்தை காட்டி வருகிறது.
பாதிப்பில் முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவில் 55.75 லட்சம் பேருக்கு தொற்று உறுதியானது, 1.74 லட்சம் பேர் பலியாகியும் இருக்கிறார்கள். இரண்டாம் இடம் வகிக்கிற பிரேசிலில் 35.01 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. 1.12 லட்சம் பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். பாதிப்பில் 3-வது இடத்தில் இந்தியா தொடருகிறது. அதே நேரத்தில் தொற்று, இந்தியாவில் தொடர்ந்து வேகம் காட்டுகிறது.
நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரே நாளில் 68 ஆயிரத்து 898 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு 29 லட்சத்து 5 ஆயிரத்து 823 ஆக உள்ளது. நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் (69 ஆயிரத்து 652) நேற்று பாதிப்பு சற்றே குறைந்துள்ளது.
நேற்று கொரோனாவுக்கு இந்தியாவில் 983 பேர் பலியாகி இருக்கிறார்கள். தொடர்ந்து மராட்டிய மாநிலம்தான் கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்து வருகிறது. இந்த 983 பேரில், மராட்டியத்தில் மட்டுமே 326 பேர் இறந்துள்ளனர். இரண்டாவது அதிகளவு உயிர்ப்பலியை தமிழகம் சந்தித்துள்ளது. மராட்டியம், தமிழகத்தை தொடர்ந்து அதிகளவில் உயிர்ப்பலி கர்நாடகத்தில் (102) நேர்ந்துள்ளது.
மற்ற மாநிலங்களை பொறுத்தமட்டில், ஆந்திராவிலும், உத்தரபிரதேசத்திலும் தலா 95, மேற்கு வங்காளத்தில் 53, பஞ்சாப்பில் 36, டெல்லியில் 22, குஜராத்தில் 16, மத்திய பிரதேசத்தில் 12, அரியானா, ராஜஸ்தானில் தலா 11 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
ஜார்கண்ட், கேரளா, உத்தரகாண்டில் தலா 9 பேரும், அசாம், ஒடிசா, தெலுங்கானா, புதுச்சேரியில் தலா 8 பேரும், சத்தீஷ்காரில் 7 பேரும், ஜம்மு காஷ்மீரில் 6 பேரும், பீகாரில் 5 பேரும், இமாசல பிரதேசத்திலும், திரிபுராவிலும் தலா 4 பேரும், கோவாவில் 2 பேரும், அந்தமான் நிகோபாரில் ஒருவரும் கொரோனாவுக்கு இரையாகி உள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 54 ஆயிரத்து 849 பேர் கொரோனாவால் மரணத்தை தழுவி உள்ளனர். 21 ஆயிரத்து 359 பேரை பலி கொண்டு, மராட்டிய மாநிலம் முதல் இடத்தில் நீடிக்கிறது. 2-வது இடத்தில் தமிழகம் (6,239) தொடர்கிறது. 3-ம் இடத்தில் கர்நாடகம் (4,429) உள்ளது.
1000-க்கும் அதிகமானவர்களை கொரோனாவுக்கு பறி கொடுத்துள்ள மாநிலங்களாக டெல்லி (4,257), ஆந்திரா (3,001), குஜராத் (2,853), உத்தரபிரதேசம் (2,733), மேற்கு வங்காளம் (2,634), மத்திய பிரதேசம் (1,171) ஆகியவை உள்ளன.
பலியானோரில் 70 சதவீதத்துக்கு மேலானோர் கொரோனாவுடன் பிற நாள்பட்ட நோய்களும் இருந்ததால், மரணம் அடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் சொல்கிறது. இந்தியாவில் கொரோனா இறப்புவிகிதம் என்பது தற்போது 1.89 சதவீதமாக குறைந்துள்ளது.
தற்போது இந்தியாவில் குணம் அடைந்தோர் விகிதம், 74.30 சதவீதமாக உயர்ந்துள்ளது. பல்வேறு ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சையை தொடர்வோர் எண்ணிக்கை 6 லட்சத்து 92 ஆயிரத்து 28 ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பில் நான்கில் ஒரு பங்கை விட குறைவு (23.82 சதவீதம்) என்பது அடிக்கோடிட்டு காட்டத்தகுந்தது.