பொதுமக்கள் பயன்பாட்டுக்கு 2 கொரோனா தடுப்பூசிகள் ஆண்டு இறுதியில் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் கூறி உள்ளார்.

புதுடெல்லி,
மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
தற்போது டெல்லி, மும்பையில் தொற்று பரவல் சற்று குறைந்துள்ளது. ஆஸ்பத்திரிகளில் சேர்க்கையும் குறைந்திருக்கிறது. அதே நேரத்தில் இந்த நகரங்களில் பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரித்துள்ளன. இவற்றின் அடிப்படையில், இவ்விரு நகரங்களில் தொற்று குறைந்திருப்பது தெரிகிறது. இந்த பெருமையில் ஒரு பங்கு, முன் எச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்றி வருகிற மக்களுக்கு சேரும்.
2-வது அலையை பொறுத்தமட்டில், அதன் முந்தைய தீவிரத்துடன் இன்னும் காணப்படவில்லை. இந்த தொற்று வந்து 7 மாதங்களே ஆகி உள்ளது. இன்னும் அதன் இயல்பை புரிந்து கொள்வதில் நமக்கு இடைவெளிகள் உள்ளன. கட்டுப்படுத்தியதாக அறிவித்த சில நாடுகள், சிறிய அளவிலான 2-வது அலைகளை அறிவித்துள்ளன. பொது சுகாதார நடவடிக்கைகள், மக்கள் பின்பற்றி வருகிற முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக 2-வது அலை தொற்று குறைவாக இருக்கிறதா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.
கொரோனா பரிசோதனை திறனை அதிரடியாக இந்தியா மேம்படுத்தி உள்ளது. தினமும் 10 லட்சம் மாதிரிகளை பரிசோதிக்கிற நிலையை 3 வாரங்களில் காணலாம்.
இந்தியாவில் உருவாக்கப்படுகிற 3 தடுப்பூசிகளின் பரிசோதனை மேம்பட்ட நிலையில் இருப்பதாகவும், வெற்றிகரமாக இருந்தால், ஒரு தடுப்பூசி எப்போது பயன்படுத்த தயாராக இருக்கும் என்று கேட்கிறீர்கள். கொரோனா தடுப்பூசியை பொறுத்தமட்டில், அதன் மருத்துவ பரிசோதனைகள் உலகளவில் வேகமாக கண்காணிக்கப்படுகின்றன.
இந்தியாவில் உருவாக்கப்படுகிற தடுப்பூசிகளின் பரிசோதனைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவு அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் அவற்றின் செயல்திறன் தெரிய வரும். இன்னொரு பக்கம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசி, இந்திய சீரம் இன்ஸ்டிடியுட்டால் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனால் சந்தைப்படுத்த வேண்டிய நேரம் பெரிய அளவில் குறைக்கப்படும்.
மற்ற இரு தடுப்பூசிகளுக்கு, தயாரிப்பதற்கும், சந்தையில் அறிமுகம் செய்வதற்கும் குறைந்தபட்சம் ஒரு மாதம் தேவைப்படலாம். இந்த தடுப்பூசிகளின் சோதனைகள் நன்றாக அமைந்து விட்டால், அவற்றை அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் பயன்பாட்டுக்கு தயாராகி விடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள ‘கோவேக்சின்’ தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் சோதனை 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. அந்த தடுப்பூசி இந்த ஆண்டு இறுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கிடைக்கலாம். இந்திய சீரம் இன்ஸ்டிடியுட், ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் சோதனையை இந்த மாதம் தொடங்க தயார் என கூறி உள்ளது. எனவே அந்த தடுப்பூசியும் இந்த ஆண்டு இறுதியில் பயன்பாட்டுக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் ஜைகோவ் டி தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் சோதனைகள் தொடங்கி உள்ளன. சில மாதங்களில் இது முடிய வாய்ப்பு உள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கொள்முதல் திட்டங்கள், சுகாதார அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டு வருகின்றன. பாரத் பயோடெக் நிறுவனத்துடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. தடுப்பூசி வெற்றி பெறுகிற பட்சத்தில் மலிவு விலையில், மானிய விலையில் இந்திய அரசுக்கு வழங்க முன்னுரிமை அளிக்கப்படும் என அதில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இதே போன்று இந்திய சீரம் இன்ஸ்டிடியுட்டுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள பேச்சு வார்த்தைகள் முன்னேறிய நிலையில் உள்ளன.
இந்திய சீரம் இன்ஸ்டிடியுட்டும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் ஆக்ஸ்போர்டு மற்றும் 2 தடுப்பூசிகளை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கிற சோதனையை மேற்கொள்ள உள்ளன. (நோவாவேக்ஸ்-சீரம் தயாரிக்கும் ஒன்றும், சீரம் தயாரிக்கும் மற்றொன்றும்). முதல் இரு கட்ட பரிசோதனை முடிவுகள் வந்த உடன் கொள்முதல் திட்டத்தின் விரிவான வரையறைகள் இறுதி செய்யப்படும்.
இந்தியாவில் தடுப்பூசி, முன்னணி களப்பணியாளர்களுக்கும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், நாள்பட்ட நோய்களுடன் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் போடப்படும். அதன்பின்னர் கிடைக்கக்கூடிய அளவை பொறுத்து, அனைவருக்கும் தடுப்பூசியை வழங்குவதற்கான ஒரு சிறப்பு திட்டம் உருவாக்கி செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.