வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஆய்வு செய்ய வேண்டும் – அதிகாரிகளுக்கு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு

Spread the love

பருவமழை தொடங்கவுள்ள நிலையில் வீடுகளில் உள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் சரியான நிலையில் உள்ளதா? என்று அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டார்.


சென்னை,

தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங், மாநகராட்சி கமிஷனர் ஜி.பிரகாஷ், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குனர் த.ந.ஹரிஹரன், குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் சி.என்.மகேஸ்வரன், நகராட்சி நிர்வாக இணை ஆணையாளர் கலைச்செல்வி மோகன், ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனர் ஆர்.மனோகர் சிங் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

இந்த கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

சென்னையில் கொரோனா பரிசோதனைகளை அதிகரித்தல், காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள், வீடுகள் தோறும் சென்று வைரஸ் தொற்று அறிகுறி உள்ளவர்களை கண்டறிதல் போன்ற பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளின் மூலம் வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த 24-ந் தேதி வரை 1 லட்சத்து 26 ஆயிரத்து 677 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 819 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ள 44 மாதிரி சேகரிக்கும் மையங்கள் மற்றும் 10 நடமாடும் மையங்கள் என மொத்தம் 54 மையங்கள் உள்ளன. நோய்த்தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் 38 ஆயிரத்து 198 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் 30.5 லட்சம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், 30 எல்.இ.டி. வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகளால் சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது. இதேபோல பிற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளிலும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட கலெக்டர்களுடனும், பொது சுகாதாரத்துறையுடனும் ஒருங்கிணைந்து செயல்படுத்தி கொரோனா வைரஸ் தொற்றை தமிழகத்தின் பிற பகுதிகளில் முற்றிலும் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மழைநீர் வடிகால் திட்டப்பணிகள், சாலைப்பணிகள், பேருந்து தட சாலைகளை மேம்படுத்தும் பணிகள், குளங்கள் பராமரிப்பு போன்ற திட்டப்பணிகள் குறித்தும், நகராட்சி நிர்வாக ஆணையரகம், ஊரக வளர்ச்சி துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்ககம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டார்.

பருவமழை தொடங்கவுள்ள நிலையில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் சரியாக இருக்கிறதா? என்பதை கண்காணித்து அடைப்புகள் இருந்தால் அவற்றை சரி செய்ய வேண்டும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்தார். மேலும் அதிகாரிகளும் அவ்வப்பொழுது சென்று அனைத்து மழைநீர் கட்டமைப்புகளும் சரியான நிலையில் உள்ளதா? என ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page