18 வயதுக்கு மேற்பட்ட ஆரோக்கியமானவர்களிடம் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி நடத்த முதலமைச்சர் உத்தரவு – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

Spread the love

கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சியை 18 வயதுக்கு மேற்பட்ட ஆரோக்கியமான நபர்களிடம் நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை,

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்ந்து உயர்த்தப்பட்டு மருத்துவப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ‘ரெம்டெசிவிர்’, ‘டோசிலிசுமாப்’, ‘எனக்சாபேரின்’, போன்ற உயிர் காக்கும் வீரியம் மிக்க மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

 

பல்வேறு நாடுகள் கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இங்கிலாந்தை சேர்ந்த ‘ஆக்ஸ்போர்டு’ பல்கலைக்கழகமும் ஒரு தடுப்பூசியை கண்டுபிடித்து இந்த தடுப்பூசியை ஆரோக்கியமான நபர்களுக்கு செலுத்தி நோய் எதிர்ப்புத் திறனை கண்டறியும் ஆராய்ச்சிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள்

இந்த தடுப்பூசி கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வல்லமை வாய்ந்ததாக அமையும் என்பது உலக அளவில் மருத்துவ நிபுணர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதன் ஒரு பகுதியாக, இந்திய அளவில் தடுப்பூசியை சோதனை செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு வாரியம் சென்னையை தேர்வு செய்துள்ளது. அதன்படி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் ஆராய்ச்சி நடைபெற உள்ளது.

இந்த தடுப்பூசி ஆராய்ச்சி தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆரோக்கியமான நபர்களிடம் நடத்த முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த ஆராய்ச்சியை சென்னை சேத்துப்பட்டில் அமைந்துள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி கழகமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும் இணைந்து மேற்கொள்ளும்.

2-ம் கட்ட ஆராய்ச்சியை தொடர்ந்து 3-ம் கட்ட ஆராய்ச்சி நடத்தப்பட்டு தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வெகு விரைவில் கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page