மாணவர்கள் சேர்க்கை முடிவடைந்ததும் 1 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு கல்வி தொலைக்காட்சியில் பாடங்கள் ஆரம்பம் – எடப்பாடி பழனிசாமி தகவல்

Spread the love

1 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை முடிவடைந்ததும் கல்வி தொலைக்காட்சியில் அந்த வகுப்புகளுக்கு பாடங்கள் தொடங்கும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-


சென்னை,

2019-ம் ஆண்டு ஆகஸ்டு 26-ந்தேதியன்று கல்வித் தொலைக்காட்சி வாயிலாக கற்றல்-கற்பித்தல் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தேன். இந்தச் சூழ்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக புதிய கல்வி ஆண்டை தொடங்குவது மிகப்பெரும் சவாலாக இருந்தது. மாணவர்கள் தங்கள் கற்றலை தங்கள் இல்லங்களிலிருந்தே தங்கு தடையின்றி பெறும் வகையில், கல்வித் தொலைக் காட்சி மாற்றி அமைக்கப்பட்டது.

 

கல்வித் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு அட்டவணை மற்றும் இதர தகவல்கள் கல்வித் தொலைக்காட்சியின் இணையதளத்திலும் கிடைக்கிறது. 1 மற்றும் 11-ம் வகுப்புகளுக் கான கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முடிந்தவுடன் ஆரம்பமாகும்.

12-ம் வகுப்பு பாடங்களை பொறுத்தவரை, அவர்களுக்கான பாடங்கள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள விலையில்லா மடிக்கணினிகளில் 2,939 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் வாயிலாக பதிவேற்றம் செய்து வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக திட்டமிடப்பட்ட 1,498 வீடியோ பாடங்களில் முதற்கட்டமாக 414 வீடியோ பாடங்கள் 4 லட்சத்து 20 ஆயிரத்து 624 மாணவர்களின் மடிக்கணினியில் பதிவேற்றம் செய்து வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பாடங்கள் வரும் மாதங்களில் வழங்கப்படும்.

நாட்டிலேயே முதன் முறையாக அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளி வேலை நாட்களில் பாடங்கள் நடத்தப்படுவதைப் போன்று ஒளிபரப்பு அட்டவணை தயாரிக்கப்பட்டு, பாட வாரியாக, தலைப்பு வாரியாக பாடம் நடத்துவதும், 10-ம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சைகை மொழியில் பாடம் ஒளிபரப்புவதும் கல்வித் தொலைக்காட்சியின் தனிச் சிறப்பாகும்.

‘கல்வித் தொலைக்காட்சி’ இன்றுடன் (நேற்று) முதலாம் ஆண்டை பூர்த்தி செய்கிறது என்ற செய்தியும், இந்த தொலைக்காட்சி இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது என்ற செய்தியும் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது. ஓராண்டு நிறைவு செய்த கல்வித் தொலைக்காட்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page