சர்வதேச அணுசக்தி முகமை ஆய்வாளர்கள் ஈரான் அணுசக்தி தளங்களை பார்வையிட அனுமதி

Spread the love

சர்வதேச அணுசக்தி முகமையால் குறிப்பிடப்பட்ட 2 அணுசக்தி தளங்களை பார்வையிட ஈரான் அனுமதி வழங்கி உள்ளது.


டெக்ரான்,

ஈரான் தன் நாட்டின் அணுசக்தி பொருட்கள், அணுசக்தி தொடர்பான நடவடிக்கைகள் குறித்த எந்த கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை என்றும், அணுசக்தி தளங்களை பார்வையிட அனுமதிப்பது இல்லை என்றும் ஐ.ஏ.இ.ஏ. என்று அழைக்கப்படுகிற சர்வதேச அணுசக்தி முகமை குற்றம் சுமத்தி வந்தது.

 

இந்த நிலையில் ஈரான் தலைநகர் டெக்ரானுக்கு சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரபேல் குரோசி கடந்த திங்கட்கிழமை சென்றார். அவர் அந்த நாட்டின் அணுசக்தி அமைப்பின் தலைவர் அலி அக்பர் சலேஹியுடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் ஒரு உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இதையொட்டி இருவரும் கூட்டறிக்கை ஒன்றை நேற்று முன்தினம் வெளியிட்டனர். அந்த அறிக்கையில், “நல்ல நம்பிக்கையுடன் சர்வதேச அணுசக்தி முகமை குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு நடைமுறைப்படுத்தல் சிக்கல்களை தீர்ப்பதில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக ஈரான் தானாக முன்வந்து, சர்வதேச அணுசக்தி முகமையால் குறிப்பிடப்பட்ட 2 அணுசக்தி தளங்களை பார்வையிட அனுமதி வழங்கி உள்ளது. இந்த சிக்கல்களை தீர்ப்பதற்காக சர்வதேச அணுசக்தி முகமையின் சரிபார்ப்பு நடவடிக்கைகளுக்கு ஈரான் உதவுகிறது” என கூறப்பட்டுள்ளது.

ஈரானில் சம்பந்தப்பட்ட 2 அணுசக்தி தளங்களை சர்வதேச அணுசக்தி முகமை ஆய்வாளர்கள் பார்வையிடுவதற்கான தேதி மற்றும் சரிபார்ப்பு நடவடிக்கைகளுக்கு ஈரான் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில், சர்வதேச அணுசக்தி முகமைக்கு ஈரானிடம் எழுப்புவதற்கு கூடுதலான கேள்விகளோ, அணுசக்தி இருப்பிடங்களை அணுகுவதற்கான கூடுதல் கோரிக்கைகளோ இல்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் தனது 2 அணுசக்தி தளங்களை பார்வையிட சர்வதேச அணுசக்தி முகமை ஆய்வாளர்களுக்கு அனுமதி அளித்திருப்பது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page