நாட்டுக்காக தன்னுயிர் ஈந்து தியாகம் செய்து, வீரர்களை காப்பாற்றிய நாய்களின் வீரம் பற்றி பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற பின் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலியில் ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
கடந்த ஆண்டு தொடர்ந்து 2வது முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னரும் இந்த நிகழ்ச்சியில் அவர் பேசி வருகிறார். இதன்படி, இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்பொழுது, சுதந்திர தின கொண்டாட்டத்தில் இந்திய ராணுவத்தின் பெருமை வாய்ந்த மோப்ப நாய்களான சோபி மற்றும் விடா எனது கவனம் ஈர்த்தன என கூறினார். அந்த தினத்தில், நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ஓய்வு பெற்ற இரு நாய்களும் கவுரவிக்கப்பட்டன.
இதுபோன்ற தைரியம் நிறைந்த நிறைய நாய்கள் நம்முடைய ஆயுத படைகளுடன் இணைந்து பணியாற்றி நாட்டுக்காக உயிர் தியாகம் செய்துள்ளன என கூறினார்.
தொடர்ந்து அவர், பல்ராம், பாவனா, கிராக்கர் (பெல்ஜியன் ஷெப்பர்டு ரகம்) ஆகிய நாய்களின் பெயர்களை குறிப்பிட்டு, அவை சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை மோப்பம் பிடித்து கண்டறிந்த விதத்தினையும், வெடிகுண்டு தாக்குதல்களில் தன்னுயிரை இழந்து பல வீரர்களின் உயிரை பாதுகாத்த தகவலையும் விளக்கமுடன் கூறினார்.
இது தவிர பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு பணிகளிலும் அவை முக்கிய பங்கு வகிக்கின்றன என சுட்டி காட்டினார். பயிற்சி பெற்ற இவ்வகை நாய்கள், நிலநடுக்கம் அல்லது கட்டிட விபத்தில் இடிபாடுகளில் சிக்கி உயிருடன் இருப்பவர்களை கண்டறிவதில் நிபுணர்களாக செயல்படுகின்றன என்றும் கூறினார்.