பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

Spread the love

பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் செப்டம்பர் 16 முதல் 46 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

முதலமைச்சர் பழனிசாமி எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில்,

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் உள்ள 11 கால்வாய்களின் கீழுள்ள பயிர்களை காக்கவும் மற்றும் குடிநீர் தேவைகளுக்காகவும் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து, தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகளிடமிருந்து எனக்குக் கோரிக்கைகள் வைத்துள்ளன.

 

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் உள்ள 11 கால்வாய்களின் கீழூள்ள வாழை பயிர்களை காக்கவும், குடிநீர் தேவைகளுக்காகவும், சிறப்பு நிகழ்வாக, செப்.1 முதல் செப்.15 வரை 15 நாட்களுக்கு நாளொன்றுக்கு 1,400 க.அடி / விநாடி வீதமும் மற்றும் வடக்கு கோடை மேலழகியான் கால்வாய் (2,260 ஏக்கர்), தெற்கு கோடை மேலழகியான் கால்வாய் (870 ஏக்கர்), நதியுண்ணி கால்வாய் (2,460 ஏக்கர்), கன்னடியன் கால்வாய் (12 ஆயிரத்து 500 ஏக்கர்) மற்றும் கோடகன் கால்வாய் (6,000 ஏக்கர்) ஆகியவற்றின் கீழுள்ள 24 ஆயிரத்து 90 ஏக்கரில் நேரடி மற்றும் மறைமுகப் பாசனப் பரப்புகளில் பகுதியாக கார்பருவ சாகுபடியில் பயிரிடப்பட்ட பயிர்களை காக்கும் பொருட்டும், சிறப்பு நிகழ்வாக, செப். 16 முதல் அக்டோபர் 31 வரை 46 நாட்களுக்கு நாளொன்றுக்கு 800 க.அடி/விநாடி வீதமும் ஆக மொத்தம் 4,993.92 மி.கனஅடிக்கு மிகாமல், பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை வட்டங்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம், ஏரல், தூத்துக்குடி மற்றும் திருசெந்தூர் வட்டங்களிலுள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page