ஏற்றுமதிக்கான சிறந்த மாநிலங்கள் பட்டியலில் தேசிய அளவில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது என முதல் அமைச்சர் பழனிசாமி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி, ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில் சிறந்த முதல் 5 மாநிலங்களில் தமிழகம் மூன்றாம் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். அரசின் கொள்கை, வர்த்தக நிலவரம், ஏற்றுமதி சூழல், ஏற்றுமதி செய்யப்படும் நிலை உள்ளிட்ட நான்கு அம்சங்கள் அடிப்படையில் இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
இதில் முதலிடத்தில் குஜராத் மாநிலம், இரண்டாம் இடத்தில் மராட்டிய மாநிலம் உள்ளன. இந்த வரிசையில் தமிழகம் மூன்றாம் இடம் பெற்றுள்ளது என முதல் அமைச்சர் பழனிசாமி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
ஆட்டோமொபைல் ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு 46 சதவீதமாகவும், ஆடைகள் ஏற்றுமதியில் 19 சதவீதமாகவும், மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் 19 சதவீதமாகவும் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் தற்போது வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் முதல் அமைச்சர் பழனிசாமி தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.