காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் ஒருவர் போலீசிடம் சரணடைந்தார்.

ஸ்ரீநகர்,
காஷ்மீரில் உள்ள பாம்போர் பகுதியில் 3 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த பகுதியில் காஷ்மீர் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கிருந்த பயங்கரவாதிகள், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனை தொடர்ந்து இரு தரப்பிற்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது.
இந்த சம்பவத்தின் போது 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மூன்றாவது நபரை போலீசார் சுற்றி வளைத்து, ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்து விடுமாறு கூறினர். இதனை ஏற்றுக்கொண்ட அந்த இளைஞர் போலீசிடம் சரணடைந்தார். அந்த இளைஞரின் பெயர் கவார் சுல்தான் மிர் என்றும் அவர் கடந்த செப்டம்பர் மாதம் பயங்கரவாத இயக்கம் ஒன்றில் சேர்ந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
காவல்துறையினர் தனக்கு இன்னொரு வாழ்க்கைக்கான வாய்ப்பை வழங்கியுள்ளதாகவும், இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் சுல்தான் மிர் கூறியுள்ளார். இது குறித்து பேசிய காஷ்மீர் காவல்துறை ஜெனரல் விஜய் குமார், பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ள இளைஞர்களுக்கு திருந்தி வாழ்வதற்கான வாய்ப்பை தாங்கள் எப்போது வழங்கி வருவதாகவும், கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை 9 இளைஞர்கள் போலீசிடம் சரணடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.