இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

Spread the love

26 மணிநேர கவுண்ட்டவுனை முடித்துக்கொண்டு, 10 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட் இன்று மாலை விண்ணில் பாய்கிறது.

ஸ்ரீஹரிகோட்டா,

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் செயற்கோள்களை பொருத்தி திட்டமிட்ட இலக்குகளில் செயற்கைகோள் களை நிலை நிறுத்தி வருகிறது. அந்தவகையில் பூமி கண்காணிப்பு, வானிலை தகவல்கள், பேரிடர்களை முன்கூட்டியே அறிந்து கொள்வது, வாகனங்களுக்கு வழிகாட்டுவது உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்காக நம் நாட்டுக்குச் சொந்தமான செயற்கோள்களை விண்ணில் நிலை நிறுத்தி வருகிறது.

இவற்றுடன் வெளிநாடுகளைச் சேர்ந்த செயற்கைகோள்களையும் திட்டமிட்ட இலக்குகளில் வெற்றிகரமாக நிலை நிறுத்தி வருகிறது. தற்போது பி.எஸ்.எல்.வி. சி-49 ரக ராக்கெட்டை இஸ்ரோ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ராக்கெட்டில் பூமி கண்காணிப்பு பணிக்காக இந்தியாவுக்கு சொந்தமான இ.ஓ.எஸ். 01 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள் பொருத்தப்பட்டு உள்ளது.

இவற்றுடன் இந்த ராக்கெட்டில் வணிக ரீதியிலான 9 பன்னாட்டு செயற்கைகோள்களும் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளது. இதில் லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த 1 தொழில்நுட்ப கண்டுப்பிடிப்பு செயற்கைகோள், லக்சம்பர்க் நாட்டைச் சேர்ந்த கிளியோஸ் ஸ்பேஸின் 4 கடல்சார் பயன்பாட்டு செயற்கைகோள்கள் மற்றும் அமெரிக்காவின் 4 லெமூர் செயற்கைகோள்களும் அடங்கும்.

இந்த 10 செயற்கைகோள்கள் அடங்கிய ராக்கெட் ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்ணில் ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து இன்று (சனிக்கிழமை) ஏவப்படுகிறது. திட்டமிட்டபடி, 26 மணி நேர கவுண்ட்டவுனை முடித்துக்கொண்டு பி.எஸ்.எல்.வி. சி-49 ரக ராக்கெட் இன்று மாலை 3.02 மணிக்கு விண்ணில் பாய்கிறது.

இதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் நேற்று 4-வது நிலைக்கான எரிபொருளை நிரப்பும் பணியை நிறைவு செய்தனர். தொடர்ந்து விஞ்ஞானிகள் ராக்கெட்டின் செயல்பாடுகளை கண்காணித்து வருகின்றனர். மேற்கண்ட தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page