அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு மருத்துவம் படிக்க மாணவர்களுக்கு ஆணை எடப்பாடி பழனிசாமி வழங்கி பெருமிதம்

Spread the love

தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் கலந்தாய்வு நேற்று தொடங்கியது. அரசு பள்ளியில் படித்தவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் தேர்வு பெற்ற மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க ஆணைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி பேசுகையில், “இந்த நாள் என் வாழ்வில் மகிழ்ச்சிகரமான நாள்” என பெருமிதத்துடன் கூறினார்.

சென்னை,

2020-21-ம் கல்வியாண்டு மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் நேற்று தொடங்கியது.

நடப்பு கல்வியாண்டு முதல் மருத்துவ படிப்பில் அரசு பள்ளிகளில் படித்த மாணவ- மாணவிகள் சேருவதற்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க அரசால் சட்டம் இயற்றப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது.

அரசு பள்ளி மாணவர்கள்

அதன்படி கலந்தாய்வின் தொடக்கமாக அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு மூலம் இடங்கள் ஒதுக்கப்பட்டன.

நேற்று தொடங்கிய இந்த கலந்தாய்வு நாளை (வெள்ளிக்கிழமை) வரை நடைபெற இருக்கிறது. அரசு கல்லூரிகளில் உள்ள 3 ஆயிரத்து 32 எம்.பி.பி.எஸ். இடங்களில் 227 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் உள்ள 1,147 அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 86 இடங்களும் என 313 எம்.பி.பி.எஸ். இடங்களும், அரசு பல் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 165 பல் மருத்துவ இடங்களில்(பி.டி.எஸ்.) 12 இடங்களும், சுயநிதி பல் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 1,065 பல் மருத்துவ இடங்களில் 80 இடங்களும் என 92 பி.டி.எஸ். இடங்களும் ஆக மொத்தம் 405 இடங்கள் இந்த கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

விருப்பமான கல்லூரிகளை தேர்வு

முதல் நாளான நேற்று அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அடிப்படையில் அறிவிக்கப்பட்ட தரவரிசையின் படி 267 மாணவ-மாணவிகள் அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கான கலந்தாய்வு நேற்று காலை 9 மணிக்கு மேல் தொடங்கியது.

கலந்தாய்வை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். அப்போது சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் கே.நாராயணபாபு, மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் செல்வராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

கொரோனா நோய்த்தொற்றை கருத்தில்கொண்டு அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியபடி கலந்தாய்வு தொடங்கி நடைபெற்றது. தரவரிசையின் அடிப்படையில் மாணவர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்களும் தங்களுடைய விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்தனர்.

மாணவர் சேர்க்கை ஆணை

தரவரிசையில் முதல் இடம் பிடித்த மாணவர் ஜீவித், மற்றும் அன்பரசு, திவ்யதர்ஷினி, குணசேகரன், பூபதி, சிவரஞ்சினி, சூர்யலட்சுமி ஆகியோர் சென்னை மருத்துவக்கல்லூரியையும், 8-வது இடம் பிடித்த இந்திராதேவி ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரியையும், தொடர்ச்சியாக சரத்குமார், ரம்யா ஆகியோர் சென்னை மருத்துவக்கல்லூரியையும் தேர்வு செய்தனர். நேற்று கலந்தாய்வில் கலந்து கொண்டு இடங்களை தேர்வு செய்த மாணவ-மாணவிகளில் முதல் 18 பேருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாணவர் சேர்க்கை ஆணையை வழங்கினார்.

இன்றும்(வியாழக்கிழமை), நாளையும்(வெள்ளிக்கிழமை) அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு மூலம் கலந்தாய்வு நடக்கிறது. நாளை மறுதினம்(சனிக்கிழமை) சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது

நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளுக்கு மாணவர்சேர்க்கை ஆணையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி பேசியதாவது:-

தமிழக வரலாற்றில் பொன்னான நாள்

இந்த நாள் என்னுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமான நாள். தமிழக வரலாற்றில் ஒரு பொன்னான நாள். அரசு பள்ளி மாணவர்களின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய நன்னாள். அரசு பள்ளியில் படித்தேன் என்ற முறையில் எனக்கு மிகுந்த மனநிறைவை ஏற்படுத்திய திருநாள். இது ஒவ்வொரு ஆண்டும் தொடரும் என்பதில் எனக்கு மட்டுமல்ல அனைவருக்கும் மகிழ்ச்சித்தரக்கூடிய நாள்.

ஜெயலலிதாவும், அவர் வழியில் இருக்கும் அரசும் கொள்கைவழியில் நீட் தேர்வை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. பிரதமருக்கு பலமுறை கடிதம் எழுதியும், நேரில் சந்தித்தும் ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அதுமட்டுமில்லாமல் சட்டப்போராட்டத்தையும் அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது. எனினும் சுப்ரீம்கோர்ட்டு ஆணைப்படி நீட்தேர்வு நடந்து வருகிறது.

நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு கடந்த 3ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேருவது மிகவும் குறைந்துவிட்டது. அரசு பள்ளி மாணவர்கள் திறமையானவர்களாக இருந்த போதும், நீட்தேர்வை எதிர்கொள்ள தேவையான வசதியும், வாய்ப்பும் குறைவாக இருப்பதால் வசதி, வாய்ப்புள்ள பிறமாணவர்களுடன் போட்டியிட்டு தேர்ச்சி பெற்றாலும் அதிக மதிப்பெண் பெறமுடியாமல் போகிறது.

மருத்துவர் குடும்பம்

தமிழ்நாட்டில் பிளஸ்-2 படிக்கும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 41 ஆயிரத்து 251 அதில் 41 சதவீதம் மாணவர்கள்(3 லட்சத்து 44 ஆயிரத்து 485 பேர்) அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆவார்கள். கடந்த ஆண்டில் வெறும் 6 அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்புக்கு தேர்வானார்கள். இந்தநிலையை மாற்றவேண்டும் என்று நான் உறுதி கொண்டிருந்தேன். ஏனென்றால் 41 சதவீதம் படிக்கும் மாணவர்களில் வெறும் 6 இடங்களில் தான் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை-எளிய மாணவர்களுக்கு சமவாய்ப்பு அளித்து மருத்துவ கனவு லட்சியத்தை நிறைவேற்றிட முடிவுசெய்யப்பட்டு பல தடைகளை தாண்டி இந்த சட்டத்தை கொண்டு வந்து ஏழை-எளிய மாணவர்களின் கனவை நினைவாக்கப்பட்டுள்ளது. இதுவரை உங்கள் குடும்பம் எவ்வாறாக அடையாளம் காணப்பட்டிருந்தாலும், இனிமேல் ‘மருத்துவர் குடும்பம்’ என்றே அடையாளம் காணப்படுவார்கள்.

கல்வி உதவித்தொகை

இந்த உள்ஒதுக்கீடு மூலம் அரசுபள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகளுக்கு 313 எம்.பி.பி.எஸ். இடங்களும், 92 பி.டி.எஸ். இடங்களும் என மொத்தம் 405 இடங்கள் கிடைக்கும். மேலும், அரசு, மாநகராட்சி, நகராட்சி, ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலன், கள்ளர் சீர்மரபினர், வனத்துறை பள்ளி மாணவர்களின் ஏழ்மை நிலை மற்றும் பொருளாதார சூழ்நிலையினை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு கல்விக்கட்டணம் மற்றும் இதர செலவினங்களால் சுமை ஏதும் ஏற்படா வண்ணம், இச்செலவினங்களை வழங்குவதற்காக ‘போஸ்ட் மேட்ரிக்’ கல்வி உதவித்தொகை மற்றும் இதர கல்விஉதவித்தொகை திட்டங்கள் மூலம் நடைமுறைப்படுத்த உரிய உத்தரவினை பிறப்பித்துள்ளேன் என்பதையும் இந்த தருணத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு மூலம் இடம் கிடைப்பதற்கு எதிர்க்கட்சி குரல் கொடுக்கவில்லை. பொதுமக்களும் கருத்துகளை சொல்லவில்லை. அரசுப்பள்ளிகளில் படிக்கும் 41 சதவீதம் மாணவர்களில் 6 பேருக்குதான் மருத்துவப்படிப்பில் இடம் என்றால், அரசுப்பள்ளி மாணவர்கள் புறக்கணிக்கப்படும் சூழல் இருக்கிறதா? என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான் நாங்கள் சட்டத்தை கொண்டு வந்தோம்.

மினி கிளீனிக்

அரசுப்பள்ளிகளில் படிப்பவர் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்களின் மருத்துவ கனவை நினைவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதை கொண்டு வந்தோம். இந்த ஏழைகளும் மருத்துவர்கள் ஆவார்கள் என்ற கனவை நினைவாக்கியது எங்களுடைய அரசு.

ஏழைகள் நிறைந்த பகுதிகளை தேர்ந்தெடுத்து அங்கு ‘மினிகிளீனிக்’ ஆரம்பிக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டேன். தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் இடங்களில் இந்த மினிகிளீனிக் தொடங்கி ஏழைமக்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்க இந்த திட்டத்தை தொடங்கியுள்ளோம்.

ஏழை மாணவர்களின் கனவு

ஏழைகளுக்கும் மருத்துவக்கல்வி கிடைக்கக் கூடிய வசதியை இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தும். அவர்களுக்கு தேவையான உதவியை தொடர்ந்து செய்யும். கிராமம் முதல் நகரம் வரை ஏழைகள் நிறைந்த பகுதியில் நல்ல தரமான மருத்துவ சிகிச்சை செய்ய இப்படிப்பட்ட மாணவச் செல்வங்களை எங்களுடைய அரசு ஊக்குவிக்கும். அவர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு மருத்துவ சேவையை செய்வார்கள் என்பது எங்களுடைய மனதில் இருக்கிறது. ஏழை மாணவர்களின் கனவை நினைவாக்கவே மருத்துவப் படிப்பில் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நன்றியுரை கூறினார்.

கொரோனா பரிசோதனை

மருத்துவப் படிப்புக்கு நேற்று தொடங்கிய கலந்தாய்வில் கலந்து கொள்ள வந்த மாணவ-மாணவிகள் அனைவருக்கும் சுகாதாரத்துறை மூலம் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டன. அந்த பரிசோதனை எடுக்கப்பட்ட பிறகே, கலந்தாய்வு நடைபெறும் பகுதிகளுக்கு மாணவ-மாணவிகள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page