சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி வருகிற 4-ந்தேதி பதவி ஏற்க உள்ளார்.

சென்னை,
சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக, கொல்கத்தா ஐகோர்ட்டு மூத்த நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி அண்மையில் பிறப்பித்தார். தற்போது கொரோனா காலம் என்பதால், புதிய தலைமை நீதிபதி, காரில் சென்னை வருகிறார். இதற்காக நேற்று காலை குடும்பத்துடன் காரில் கொல்கத்தாவில் இருந்து புறப்பட்ட தலைமை நீதிபதி, ஒடிசா மாநிலம், பெர்காம்பூரில் உள்ள விருந்தினர் மாளிகையில் இரவில் தங்கினார்.
பின்னர், இன்று (சனிக்கிழமை) காலையில் அங்கிருந்து புறப்பட்டு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வழியாக வந்து, இரவில் ஏலூரில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். ஞாயிற்றுக்கிழமை (நாளை) காலையில் அங்கிருந்து புறப்பட்டு, கும்மிடிப்பூண்டியில் விருந்தினர் மாளிகையில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு, மாலையில் சென்னை வந்தடைகிறார்.
இதையடுத்து வருகிற 4-ந்தேதி (திங்கட்கிழமை) காலையில் தலைமை நீதிபதியாக அவர் பதவி ஏற்கிறார். சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜிக்கு, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர், ஐகோர்ட்டு நீதிபதிகள், அமைச்சர்கள், தலைமை செயலாளர், டி.ஜி.பி., உள்ளிட்ட உயர் அதிகாரிகள், மத்திய, மாநில அரசு வக்கீல்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.
மதியம் சென்னை ஐகோர்ட்டில், புதிய தலைமை நீதிபதிக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அவரை வரவேற்று தமிழக அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் மற்றும் வக்கீல் சங்க நிர்வாகிகள் பேசுகின்றனர்.
அதேபோல சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி, குஜராத் ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு இன்று (சனிக்கிழமை) காலை 11.30 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக வழியனுப்பு விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் நீதிபதி வினீத் கோத்தாரியை வாழ்த்தி அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் பேசுகிறார். பின்னர் அனைவருக்கும் நன்றி தெரிவித்து நீதிபதி பேசுகிறார்.