சமையல் கியாஸ் சிலிண்டருக்கான மானியம் குறைப்பு

Spread the love

சமையல் கியாஸ் சிலிண்டருக்கான மானியம் குறைக்கப்பட்டிருப்பது வாடிக்கையாளர்கள் இடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை,

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் வீடுகளுக்கு 14.2 கிலோ எடையிலும், ஓட்டல்கள் மற்றும் பிற வர்த்தக பயன்பாடுகளுக்கு 19 கிலோ எடையிலும், மலைப்பிரதேசங்களில் உள்ள குடியிருப்புகளுக்கு 5 கிலோ எடையிலும் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 2.38 வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்களில் 32 லட்சம் பேர் மட்டுமே தாமாக முன்வந்து மானியத்தை விட்டுக்கொடுத்துள்ளனர்.

ஒரு குடும்பம் ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மட்டும் மானிய விலையில் பெறலாம். இதற்கான மானியத்தொகை வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். 12 சிலிண்டர் ஒதுக்கீட்டுக்கு மேல் தேவைப்படும் சிலிண்டர்களை மானியம் இல்லாமல் தான் வாங்க முடியும். சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் நிலவரத்துக்கு ஏற்ப மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.714 ஆகவும், மானியம் ரூ.174.72 ஆகவும் இருந்தது. கடந்த ஆண்டு மே மாதம் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.569 ஆக இருந்தது. ஆனால் மானியம் கொடுக்கப்படவில்லை. அடுத்த சில மாதங்களில் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.606 முதல் ரூ.881 வரை வெவ்வேறு விலைகளில் இருந்தது. அப்போது வாடிக்கையாளர்களுக்கு மானியமாக ரூ.25.45 மற்றும் ரூ.23.95 என வெவ்வேறு தொகை செலுத்தப்பட்டது.

சிலருக்கு மானியம் வங்கி கணக்கில் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. கடந்த மாதம் (டிசம்பர்) கியாஸ் சிலிண்டர் விலை ரூ.710 ஆக உள்ளது. ஆனால் இதற்கான மானியமாக ரூ.24.95 வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா பேரிடரால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மானியத்தொகை குறைக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே கடுமையான கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கி கணக்கை பரிசோதித்துவிட்டு, மானியத்தொகை குறைக்கப்பட்டிருப்பது அறிந்துகொள்ளும் வாடிக்கையாளர்கள் கியாஸ் சிலிண்டர் ஏஜென்சிகளுக்கு சென்று வாக்குவாதங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மானியத்தொகையினால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தினந்தோறும் வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் படையெடுத்து வருவது கியாஸ் சிலிண்டர் ஏஜென்சிகளுக்கு தீராத தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கியாஸ் சிலிண்டர் வினியோகஸ்தர்கள் கூறுகையில், ‘மானியத்தை ஏன் குறைத்தீர்கள்? என்று வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் தினந்தோறும் எங்களிடம் வந்து வங்கி புத்தகத்தை காண்பித்து சண்டை போடுகிறார் கள். சிலிண்டர் விலை, மானியத்தை நாங்கள் நிர்ணயம் செய்வது இல்லை. எங்களுக்கும், அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஊழியர்கள் அவர்களிடம் விளக்கம் அளித்து வருகிறார்கள்’ என்றனர்.

இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் கேட்டபோது, ‘பெட்ரோலிய அமைச்சகம் தான் மானியத்தொகையை நிர்ணயம் செய்து வருகிறது. அவர்கள் குறிப்பிடும் தொகையை மட்டுமே எண்ணெய் நிறுவனங்கள் வசூலிக்கின்றன’ என்றனர்.

கொரோனா பேரிடர் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து பொருளாதாரம் இன்னும் மீளவில்லை. ஏராளமானோர் வேலை, வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். இதுபோன்ற சூழல்களை கவனத்தில் கொண்டு அரசு மானியத்தொகையை உயர்த்த வேண்டும் என்று நுகர்வோர் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page