சென்னை பெரும்பாக்கத்தில் நகர்ப்புற ஏழைகளுக்காக 1,152 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்துக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார்.

சென்னை,
மத்திய அரசு, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ‘லைட்ஹவுஸ் புராஜெக்ட்’ என்ற பெயரில் வீடு கட்டும் திட்டத்தை தொடங்கி உள்ளது. இதன்கீழ் 6 மாநிலங்களில் உள்ள 6 நகரங்களில் தலா ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் கட்டப்பட உள்ளன. இவ்வீடுகளை 12 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை, மத்தியபிரதேசத்தில் இந்தூர், குஜராத்தில் ராஜ்கோட், ஜார்கண்டில் ராஞ்சி, திரிபுராவில் அகர்தலா, உத்தரபிரதேசத்தில் லக்னோ ஆகிய நகரங்களில் வீடுகள் கட்டப்படுகின்றன. சென்னை பெரும்பாக்கத்தில் 1,152 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி, காணொலி மூலம் அடிக்கல் நாட்டி பேசியதாவது:-
ஏழை மற்றும் நடுத்தர வகுப்பினருக்கு வீடு வழங்குவதுதான் எங்கள் அரசின் முன்னுரிமை பணி ஆகும். முன்பெல்லாம், சாதாரண மக்கள் நிறைய பணம் செலவழித்தாலும், உரிய நேரத்தில் அவர்களிடம் வீடு ஒப்படைக்கப்படுவது இல்லை. இதனால் சொந்த வீடு வாங்கும் அவர்களின் கனவு ஆட்டம் கண்டது. அதிகமான வட்டி விகிதமும் ஒரு முட்டுக்கட்டையாக இருந்தது.
ஆனால், கடந்த 6 ஆண்டுகளாக எங்கள் அரசு எடுத்த நடவடிக்கைகளால், சாமானியருக்கும் தங்களுக்கு சொந்த வீடு கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. பொருளாதாரத்தை வலுப்படுத்த கட்டுமான துறை முக்கிய காரணியாக உள்ளது. ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிக்க இந்த அரசு எண்ணற்ற நடவடிக்கைகள் எடுத்துள்ளது, தொடர்ந்து எடுக்கும்.
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த வீடுகள் கட்டப்படும். இவை குறைவான காலத்தில், குறைவான விலையில் கட்டப்படும். பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகளின் நவீன கட்டுமான முறைகள் இந்த கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும். கட்டுமான வல்லுனர்கள், என்ஜினீயர்கள், மாணவர்கள் ஆகியோர் இந்த திட்டத்தை நேரில் பார்வையிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அடிக்கல் நாட்டு விழாவில் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய உரை வருமாறு:-
அதிக நகர்ப்புறங்களைக் கொண்ட மாநிலம் தமிழகம். இங்குள்ள மொத்த மக்களில் 48.45 சதவீதம் பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். அதில், 14.63 லட்சம் குடும்பத்தினர் நகர்ப்புறங்களில் உள்ள குடிசைப்பகுதியில் வாழ்கின்றனர்.
இவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களைக் களையும் நோக்கத்தில், மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா, தமிழ்நாடு 2023 தொலைநோக்குத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன்படி 2023-ம் ஆண்டுக்குள் தமிழக நகரங்கள், குடிசைகள் அற்ற நகரங்களாக மாற வழிவகை ஏற்படும்.
பிஎம்ஏஒய்-கிராமின் என்ற பிரதமர் வீட்டுவசதி திட்டப்படி, ஒரு வீட்டுக்கு ரூ.1.20 லட்சம் செலவிடப்படுகிறது. இதில் ரூ.72 ஆயிரத்தை மத்திய அரசும், ரூ.48 ஆயிரத்தை மாநில அரசும் வழங்குகின்றன. இதில் காங்கிரீட் கூரை போடுவதற்காக கூடுதலாக ரூ.50 ஆயிரத்தை மானியமாக மாநில அரசு வழங்குகிறது. மேலும் கூடுதலாக ஒவ்வொரு பயனாளிகளுக்கும் கழிவறை கட்டுவதற்காக நரேகா திட்டத்தின் கீழ் ரூ.23 ஆயிரம் வழங்கப்படுகிறது.
சமீபத்தில் இந்த திட்டம் குறித்து நான் ஆய்வுகள் மேற்கொண்டேன். ஏழைகளிலும் ஏழையாக இருப்போர், விலைவாசி உயர்வினாலும், கொரோனாவினால் ஏற்பட்ட வாழ்வாதார இழப்பினாலும் அந்த தொகையில் வீடு கட்ட முடியாது என்பதை அறிந்தேன்.
எனவே ஒவ்வொரு வீட்டு கட்டுமானத்துக்கும் கூடுதலாக ரூ.70 ஆயிரம் தொகையை அனுமதித்து உத்தரவிட்டேன். அதன்படி ஒரு வீட்டுக்கான செலவு ரூ.1.70 லட்சத்தில் இருந்து ரூ.2.40 லட்சமாக உயர்ந்துள்ளது. அதன்படி, தமிழக அரசுக்கு 2.5 லட்சம் வீடுகளைக் கட்டுவதற்கு ரூ.1,805 கோடி செலவாகிறது.
பிரதமர் வீட்டுவசதி (நகர்ப்புறம்) திட்டத்தின் கீழ் ரூ.27 ஆயிரம் கோடி செலவில் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 720 அடுக்குமாடி குடியிருப்புகள், 3 லட்சத்து 42 ஆயிரத்து 769 தனி வீடுகள் கட்டுவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உலக அளவிலான வீட்டுவசதி கட்டுமான தொழில்நுட்ப திட்டத்தின் கீழ் சென்னை பெரும்பாக்கம் பகுதியில் 413 சதுரஅடி பரப்பளவில் ரூ.116.27 கோடி செலவில் 1,152 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மேலும் ரேஷன் கடை, 2 அங்கன்வாடி மையங்கள், ஒரு நூலகம், ஒரு பால் பூத், 6 கடைகள் போன்ற சமூக வசதிகளும் இந்த திட்டத்தில் அடங்கியுள்ளன. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், துணை மின்நிலையம் ஆகிய வசதிகளும் செய்து தரப்படும்.
இந்த திட்டம் 15 மாதங்களுக்குள் நிறைவு பெறும். பேரிடர் பாதுகாப்பு வசதிகளுடன் இக்குடியிருப்புகள் கட்டப்படும். சென்னையில் நீர்நிலைகளின் ஓரங்களிலும், ஆட்சேபனைக்குரிய இடங்களிலும் வசிக்கும் நகர்ப்புற ஏழைக் குடும்பத்தினருக்கு இங்கு வீடுகள் ஒதுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை மந்திரி (தனிப்பொறுப்பு) ஹர்தீப் சிங் புரி, மேற்கண்ட 5 மாநிலங்களின் முதல்-மந்திரிகள், தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச்செயலாளர் கே.சண்முகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் தா.கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர்.