முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மணிமண்டபத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நாளை திறந்து வைக்கின்றனர்.
சேரன்மகாதேவி,
அ.தி.மு.க.வை சேர்ந்த, தமிழக சட்டசபை முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் கடந்த ஆண்டு மறைந்தார். பி.எச்.பாண்டியனுக்கு அவரது சொந்த ஊரான சேரன்மாதேவி அருகே கோவிந்தபேரியில் 25 சென்ட் நிலத்தில் மணிமண்டபம் கலைநயத்துடன் கட்டப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபத்தில் சபாநாயகர் இருக்கையில் பி.எச்.பாண்டியன் அமர்ந்து இருப்பது போன்று தத்ரூபமாக சிலை அமைக்கப்பட்டுள்ளது.
மணிமண்டபத்தை சுற்றி புல்வெளியுடன் கூடிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பி.எச்.பாண்டியனின் முதலாவது ஆண்டு நினைவு தினமான நாளை (திங்கட்கிழமை) மதியம் 1 மணி அளவில் கோவிந்தபேரியில் உள்ள அவரது மணிமண்டப திறப்பு விழா நடைபெறுகிறது.
விழாவிற்கு அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.பி. தலைமை தாங்குகிறார். துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர் ராஜலட்சுமி, அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், முருகையா பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், வழிகாட்டுக்குழு உறுப்பினருமான பி.எச்.மனோஜ் பாண்டியன் வரவேற்று பேசுகிறார்.
விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பி.எச்.பாண்டியன் மணிமண்டபத்தையும், சிலையையும் திறந்து வைக்கிறார்கள். விழாவில் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், கட்சி் தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.
முடிவில் டாக்டர் பி.எச்.நவீன் பாண்டியன் நன்றி கூறுகிறார். விழா ஏற்பாடுகளை பி.எச்.மனோஜ் பாண்டியன், அட்வகேட் ஜெனரல் பி.எச்.அரவிந்த் பாண்டியன், டாக்டர்கள் பி.எச்.நவீன் பாண்டியன், பி.எச்.தேவமணி பாண்டியன், வக்கீல் பி.எச்.வினோத் பாண்டியன் ஆகியோர் செய்துள்ளனர்.