ஆஸ்திரியாவில் காதலை ஏற்று கொண்ட பெண் ஒருவர் அடுத்த சில நிமிடங்களில் 650 அடி உயர மலை உச்சியில் இருந்து தவறி விழுந்த சோகம் நடந்துள்ளது.
கரீந்தியா,
ஆஸ்திரியா நாட்டின் கரீந்தியா நகரில் 27 வயது நிறைந்த வாலிபர் ஒருவர் காதலியிடம் தனது காதலை தெரிவிக்க விரும்பியுள்ளார். இதற்காக 32 வயதுடைய தனது காதலியை அழைத்து கொண்டு பால்கெர்ட் என்ற மலையின் உச்சிக்கு சென்றுள்ளார்.
அதன் பின்னர் துணிவை வரவழைத்து கொண்டு காதலியிடம் தனது காதலை வெளிப்படுத்தி உள்ளார். அவரது காதலை காதலியும் ஏற்று கொண்டார். ஆனால், அடுத்த சில நிமிடங்களில் அந்த பெண் 650 அடி உயர மலை உச்சியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.
இதனை சற்றும் எதிர்பாராத அவரது காதலர், தனது காதலியை காப்பாற்ற அவரை பிடித்து கொள்ள முயற்சித்து உள்ளார். ஆனால், அது பலனளிக்காமல் அவரும் தவறி விழுந்துள்ளார். அந்த காதலர் 50 அடி சென்றதும், மலை முகட்டை பிடித்து கொண்டார். அதில் தொங்கியபடி இருந்துள்ளார்.
இந்த நிலையில், கீழே விழுந்த காதலி தரையில் விழாமல் அடர்ந்திருந்த பனிக்கட்டிகள் மீது விழுந்துள்ளார். இதனால் அவர் உயிர் தப்பினார். அந்த வழியே சென்ற நபர் ஒருவர் அசைவற்று கிடந்த பெண்ணை கண்டு அவசரகால சேவைக்கான பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.
காதலரை மீட்க ஹெலிகாப்டர் ஒன்றும் வரவழைக்கப்பட்டது. இதன்பின்னர் இருவரும் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சையும் வழங்கப்பட்டது. காதலை ஏற்ற ஒரு சில நிமிடங்களிலேயே 650 அடி உயர மலை உச்சியில் இருந்து விழுந்து, பெண் ஒருவர் உயிர் தப்பியது ஆச்சரியம் ஏற்படுத்தி உள்ளது.