கொரோனா தடுப்பூசி எந்த கட்சிக்கும் சொந்தமானதல்ல என்றும் அதனை போட்டுக்கொள்ள என்னை தாராளமாக அழையுங்கள் என்றும் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
ஸ்ரீநகர்,
நாட்டில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியிருக்கும் நிலையில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ‘இந்த தடுப்பூசியை எப்படி நம்புவது? பா.ஜ.க. தடுப்பூசியான இதை போட்டுக்கொள்ள மாட்டேன்’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்–மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான உமர் அப்துல்லா டுவிட்டரில் நேற்று வெளியிட்ட செய்தியில், ‘மற்றவர்களை பற்றி எனக்கு தெரியாது. ஆனால் நான் என்னுடைய முறை வரும்போது சந்தோஷமாக கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்வேன்.
எந்த ஒரு தடுப்பூசியும் எந்த அரசியல் கட்சிக்கும் சொந்தமானதல்ல. அவை மனிதகுலத்துக்கு சொந்தமானவை. கொரோனாவால் பாதிக்கக்கூடிய மக்களுக்கு எவ்வளவு சீக்கிரம் தடுப்பூசி போடுகிறோமோ அவ்வளவு நல்லது’ என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், ‘கொரோனா வைரஸ் மிகுந்த சீர்குலைவை ஏற்படுத்திவிட்டது. இந்நிலையில் ஒரு தடுப்பூசியால் இயல்புநிலையை ஏற்படுத்த முடியும் என்றால், அதை போட்டுக்கொள்ள என்னை தாராளமாக அழையுங்கள்’ என்று கூறியுள்ளார்.