தமிழகத்தில் தொழில் வளர்ச்சி நல்ல நிலையில் உள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டி,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்க நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கினோம். பல்வேறு நாடுகளில் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டிருந்த போதிலும் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி நல்ல நிலையை எட்டி உள்ளது. தமிழ்நாட்டில் புதிய தொழில்களுக்கு 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளன. 60 ஆயிரம் பேர் புதிதாக தொழில் தொடங்க முன்வந்துள்ளனர்.
அ.தி.மு.க. ஆட்சியில் உற்பத்தியாளர்கள், ஆலை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிப்பு இன்றி தொழில் செய்கின்றனர். ஆனால் கடந்த தி.மு.க. ஆட்சியின்போது பல்வேறு பிரச்சினைகள் இருந்து வந்தது. எனவே கோவில்பட்டி பகுதி வணிகர்கள், உற்பத்தியாளர்கள் கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
குழந்தைக்கு பெயர் சூட்டினார்
கோவில்பட்டியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்ட போது அங்குள்ள டீக்கடைக்கு சென்று டீ குடித்தார். கோவில்பட்டி அருகே உள்ள வில்லிசேரியில் எடப்பாடி பழனிசாமி காரில் சென்றபோது நிர்மலாதேவி என்ற பெண் தன்னுடைய ஆண் குழந்தையுடன் முதல்-அமைச்சரை பார்த்து வணங்கினார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி, அந்த குழந்தைக்கு ‘ஆதர்வா’ என்று பெயர் சூட்டினார்.
கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் சண்முகாநகரைச் சேர்ந்த கருப்பசாமி (வயது 34) என்ற ராணுவ வீரர் லடாக் பகுதியில் நடந்த விபத்தில் மரணமடைந்தார். அவரது வீட்டிற்கு சென்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்த கருப்பசாமி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
முன்னதாக கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புத்தூர் விருந்தினர் மாளிகையில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த வீரபாண்டிய கட்டபொம்மன் உருவப்படத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்பட பலர் கலந்து கொண்டனர்.