மே 3-ம் தேதி வரை ஊரடங்கு விதிகளில் தளர்வு இல்லை என பஞ்சாப், கர்நாடக மாநிலங்கள் முடிவு செய்துள்ளன.
பெங்களூரு,
கொரோனா எதிரொலியாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ந்தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 14ந்தேதி வரை 21 நாட்களுக்கு இந்த உத்தரவு நடைமுறையில் இருந்தது. இதனால் பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டது. அத்தியாவசிய தேவைகளான பால், மருந்து, மளிகை, மருந்து மற்றும் உணவு பொருட்களுக்கான கடைகள் தவிர்த்து பிற கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டதுடன், அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன.
அரசின் ஊரடங்கு உத்தரவு, மக்கள் ஒத்துழைப்பு ஆகியவற்றால் கொரோனா பரவல் பெருமளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும், கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது. இந்த சூழலில், பிரதமர் மோடி, “கடந்த 14ந்தேதி காலை நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும்பொழுது, இந்தியாவில் 500 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. நாட்டில் நோய் தொற்று மிக வேகமுடன் பரவி வருகிறது.
இதனால் நாடு முழுவதும் மே 3-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. ஏப்ரல் 20-ந்தேதி வரை கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கும். பின்னர் தளர்வுகள் இருக்கும். ஏப்ரல் 20-ந்தேதிக்கு பிறகு அதிகம் பாதிப்பு ஏற்படாத பகுதிகளில் விதி விலக்குகள் அறிவிக்கப்படும்” என கூறினார். இந்த நிலையில், மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு விதிகளில் தளர்வு இல்லை என்று பஞ்சாப், கர்நாடக மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன.