27 நாட்களுக்கு பின்னர் சுங்கச்சாவடிகள் மீண்டும் இயங்க தொடங்கியது. கட்டண உயர்வும் அமலுக்கு வந்தது.
சென்னை,
கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கான வாகன போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.
அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள், டிராவல்ஸ் கார்கள், ஆட்டோக்கள் போன்ற பிற வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக சுங்கச்சாவடிகளில் கடந்த மாதம் 25-ந்தேதி முதல் கட்டண வசூலிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
சுங்கச்சாவடிகள் இயங்காததால் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள் கட்டணமின்றி சென்று வந்தன. குறைந்த அளவே வாகனங்கள் இயக்கப்பட்டதால் சுங்கச்சாவடிகள் வாகன நெரிசல் இன்றி காட்சி அளித்தன.
இந்தநிலையில் கொரோனா பாதிப்பு குறைந்த பகுதிகளில் 20-ந்தேதி முதல் நிபந்தனைகளுடன் ஊரடங்கு தளர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து அன்றைய தினம் முதல் சுங்கச்சாவடிகளை மீண்டும் இயக்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்துக்கு மத்திய சாலை போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் சார்பில் கடிதம் எழுதப்பட்டது.
ஊரடங்கு காலம் முடிவடையும் மே 3-ந்தேதி வரை சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாது என்று எதிர்பார்த்திருந்த லாரி உரிமையாளர்களுக்கு மத்திய அரசின் இந்த உத்தரவு அதிர்ச்சியை ஏற் படுத்தியது.
அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டும் இயங்கி வரும் வேளையில் மீண்டும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது ஏற்புடையது அல்ல என்று மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்புகள் கிளம்பின. அகில இந்திய மோட்டார் வாகன காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது விலைவாசி உயர்வுக்கு வித்திடும் என்று அரசியல் கட்சி தலைவர்களும், வணிகர்களும் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர்.
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலித்தால் சுங்கச்சாவடிகளை முற்றுகையிடுவோம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா எச்சரிக்கை விடுத்தார். எனினும் இந்த எதிர்ப்புகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.
இந்தநிலையில் 27 நாட்களுக்கு பின்னர் சுங்கச்சாவடிகள் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் மீண்டும் வழக்கம் போல் இயங்க தொடங்கின. கொரோனா முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக சுங்கச்சாவடி ஊழியர்கள் கையுறை, முககவசம் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட நாட்களுக்கு பின்னர் சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டதால், சில இடங்களில் போலீசார் பாதுகாப்புடன் ஊழியர்கள் பணியாற்றினர். சுங்கச்சாவடிகளை திறக்கக்கூடாது என்று எதிர்ப்பு குரலுக்கு மத்தியில் சுங்கச்சாவடிகளை மீண்டும் இயக்கியது மட்டுமின்றி ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது’ போன்று சுங்க கட்டணமும் உயர்த்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சுங்கச்சாவடி ஊழியர் ஒருவர் கூறுகையில், ‘சுங்கச்சாவடிகளில் ஆண்டுந்தோறும் ஏப்ரல் மாதம் 1-ந்தேதி புதிய கட்டணம் நிர்ணயிக்கப்படும். அதன்படி தான் தற்போது கட்டணம் உயர்த்தப்பட்டு அமலுக்கு வந்துள்ளது’ என்றார்.
இந்த கட்டண உயர்வுக்கு லாரி உரிமையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். கட்டண உயர்வை உடனடியாக திரும்ப வேண்டும் என்று மத்திய அரசுக்கு வலியுறுத்தி உள்ளனர்.