தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,520 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சாவு எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனா வைரசால் பாதித்த சிலருக்கு நோய்த் தொற்றுக்கான முழுமையான காரணம் தெரியவில்லை. இதனால் சமூக தொற்று ஏற்பட்டுள்ளதோ? என்ற அச்சம் நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 43 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,520 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 46 பேர் சிகிச்சை முடிந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று சென்னையில் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் நேற்று (20-ந்தேதி) 6 ஆயிரத்து 109 பேருக்கு சளி மற்றும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுதான் ஒரே நாளில் அதிகமாக பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை ஆகும்.
தமிழகத்தில் இதுவரை 46 ஆயிரத்து 985 சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. மேலும் இதுவரை 41 ஆயிரத்து 710 பேரிடம் சளி மற்றும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 43 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,520 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்து 12 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். தமிழக மருத்துவமனைகளில் இதுவரை 457 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். அதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 46 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக மருத்துவமனைகளில் தற்போது 1,043 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 6 பேருக்கு நோயின் தாக்கம் அதிகரித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற அனைவரும் நலமுடன் உள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரசால் மேலும் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மூத்த மருத்துவரும் ஒருவர். இதுவரை தமிழகத்தில் 17 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
நேற்று ஒரே நாளில் சென்னையில் 18 பேரும், திருச்சி, தென்காசி மாவட்டங்களில் தலா 4, விழுப்புரத்தில் 3, அரியலூர், திருவள்ளூர், திண்டுக்கல் மாவட்டங்களில் தலா 2, தூத்துக்குடி, திருப்பூர், நாகப்பட்டினம், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுக்கோட்டையில் முதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உலக அளவில் உலக சுகாதார நிறுவனம் இந்தியாவில் நோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என பாராட்டியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் மற்ற மாநிலங்களை விட அதிக பேரை ‘டிஸ்சார்ஜ்’ செய்துள்ளோம். இறப்பு விகிதத்தையும் குறைத்துள்ளோம்.
தமிழக அரசு மருத்துவமனைகளை மத்திய அரசு குழுவினர் நேற்று பார்வையிட்டனர். அப்போது அவர்கள் அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி வருகிறோம் என பாராட்டி உள்ளனர். இந்த பாராட்டு பெறும் வகையில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் மருத்துவமனையை வைத்துள்ளனர்.
டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் 618 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு 661 பேருக்கு நோய்த் தொற்று என 1,279 பேருக்கு பாதிப்பு உள்ளது. மற்ற வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் சென்று வந்தவர்கள் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 198 பேருக்கு இந்த நோய்த்தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சுகாதார ஊழியருக்கு நோய்த்தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அனைவரும் நலமுடன் உள்ளனர். தமிழகத்தில் இதுவரை சமூக தொற்று ஏற்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.