சென்னை,
சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனாவால் உயிரிழந்தவர் யாராக இருந்தாலும், தற்போது உள்ள நெறிமுறைபடி கிருமி நாசினி தெளித்து, உடலை மூடி, அதை கொண்டு வரும் பணியாளர்களுக்கு முறையான பாதுகாப்பு உடை அணிவித்து அதை தகனம் செய்ய ஏற்பாடு செய்துள்ளோம். உடலை தகனம் செய்யும் போது ஏற்படும் தூசியினாலோ, காற்றினாலோ, மாசுநாலோ எந்தவிதத்திலும் இந்த நோய் பரவாது. தயவு செய்து உடலை தகனம் செய்யும் போது வீண் வதந்திகளை நம்பி இழுக்கான விஷயங்களில் ஈடுபடவேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.
பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா பாதிப்பு இல்லை. அவருடன் 6 பேர் தங்கி இருந்துள்ளனர். அதில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
காசியில் இருந்து 127 பேர் தமிழகம் வந்துள்ளனர். அதில் 2 பேருக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். துரித பரிசோதனை மிகவும் உதவிகரமாக உள்ளது. பரிசோதனை உபகரணங்களை உற்பத்தி செய்ய ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. மேலும் ‘பிளாஸ்மா’ சிகிச்சை அளிக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.