கொரோனா வைரஸ் பரவலை சூரிய ஒளி, வெப்பம், ஈரப்பதம் குறைக்கும் – அமெரிக்கா நடத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு

Spread the love

கொரோனா வைரஸ் பரவலை சூரிய ஒளியும், வெப்பமும், ஈரப்பதமும் குறைக்கும் என்று அமெரிக்கா நடத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

வாஷிங்டன்,

உலகை கதிகலங்க வைத்து வருகிற கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ், இதுவரை உலகளவில் 27 லட்சத்துக்கும் அதிகமானோரை தாக்கி இருக்கிறது. பலி எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி வருகிறது.

இந்த ஈவிரக்கமற்ற, கொடிய வைரசை வேரடி மண்ணோடு வீழ்த்துவதற்கு என்ன வழி என்று உலகமெங்கும் உள்ள விஞ்ஞானிகள் மாய்ந்து மாய்ந்து ஆராய்ச்சிகள் நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இயக்குனரகம் ஒரு ஆராய்ச்சியை செய்துள்ளது.

அந்த ஆராய்ச்சியின் முடிவுகளை வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நேற்றுமுன்தினம் (வியாழக்கிழமை) ஜனாதிபதி டிரம்ப் முன்னிலையில் உள்நாட்டு பாதுகாப்பு துணை மந்திரி பில் பிரையன் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

சூரிய ஒளி மற்றும் ஈரப்பதத்தில் வெளிப்படுகிறபோது கொரோனா வைரஸ் அதிவேகமாக இறக்கிறது. நேரடி சூரிய ஒளியில் கொரோனா வைரஸ் மிக விரைவாக இறக்கிறது. ஐசோபுரொபைல் ஆல்கஹால், கொரோனா வைரசை 30 வினாடிகளில் கொல்லும்.

பூமியின் மேற்பரப்பிலும், காற்றிலும் கொரோனா வைரஸ் இருக்கிறபோது, அதை சூரிய ஒளி கொல்லும் என்பது எங்களது ஆராய்ச்சியின் மிக முக்கிய சக்திவாய்ந்த தாக்கமாக அமைந்துள்ளது.

மேலும் அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் ஆகிய இரு நிலைகளுமே கொரோனா வைரசுக்கு சாதகமற்றவை ஆகும்.

கோடை போன்ற சூழ்நிலைகள், கொரோனா வைரஸ் பரவுவதை குறைக்கப்போகின்றன என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். இது நாங்கள் (ஆராய்ச்சியில்) முன்னேறிச் செல்வதற்கான வாய்ப்பு ஆக அமையும்.

95 டிகிரி பாரன்ஹீட் அல்லது 35 டிகிரி செல்சியசுக்கு அதிகமான வெப்ப நிலையும், ஈரப்பதமும் கொரோனா வைரசின் ஆயுள்காலம் 18 மணி நேரம் என்பதை பாதியாக குறைக்கிறது என்று ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

கொரோனா வைரஸ் சூரிய ஒளியில் வெளிப்படுகிறபோது, 75 டிகிரிக்கு மேல் வெப்ப நிலை நிலவி, ஈரப்பதம் 80 டிகிரி அளவுக்கு இருந்தால், வைரசானது சில நிமிடங்களில் இறந்து விடும்.

அதே நேரத்தில், இந்த கண்டுபிடிப்புகளால் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட எந்த விதிமுறை தொடர்பாகவும் நான் புதிய பரிந்துரைகளை கூறவில்லை. செய்யவும் இல்லை.

கொரோனா வைரஸ் பரிமாற்ற தொடரில், அறியப்படாத பல தொடர்புகள் இருக்கின்றன. நாங்கள் கூறுகிற இந்த போக்கானது, கொரோனா வைரசுடன் தொடர்புடைய ஆபத்தை குறைக்கிற நடைமுறை முடிவு எடுப்பதை ஆதரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

எங்கள் துறையினர் தயாராக உள்ள கிருமி நாசினிகளை பரிசோதித்து வருகிறோம். ப்ளச்சை (சுத்தப்படுத்துவதற்கான ஒரு வகை ரசாயனம்) பரிசோதித்தோம்.

ஐசோபுரொபைல் ஆல்கஹாலை சோதித்தோம். குறிப்பாக உமிழ்நீர் மற்றும் சுவாச திரவங்களில் இருப்பதை சோதித்தோம்.

இதில் ப்ளச்சானது கொரோனா வைரசை 5 நிமிடங்களில் கொல்கிறது. ஆனால் ஐசோபுரொபைல் ஆல்கஹால், 30 வினாடிகளில் கொரோனா வைரசை கொல்கிறது. பிற கிருமிநாசினிகளில், குறிப்பாக உமிழ்நீரில் உள்ள கொரோனா வைரசை நாங்கள் பார்க்கிறோம்.

எங்கள் ஆராய்ச்சியில், கொரோனா வைரஸ் பரவுதலைப் பொறுத்தமட்டில், தொடர்பு சங்கிலியில் பலவீனமான தொடர்புகளை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். அவை வெப்பம் மற்றும் ஈரப்பதம் ஆகும். சூரிய ஒளியில் உள்ள புற ஊதாக்கதிர்களும் அந்த வரிசையில் சேரும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவில் கோடை காலம் தொடங்கி இருக்கிற நிலையில், அமெரிக்கா நடத்தி கூறியுள்ள ஆராய்ச்சி முடிவுகள் பிரதிபலித்தால், இங்கே கொரோனா வைரஸ் பரவல் குறையத் தொடங்குவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page