புதுடில்லி: கொரோனா பரிசோதனைகளுக்கு ஏற்ற வகையில் இல்லாத பழுதான ஆன்டிபாடி பரிசோதனை கருவிகள் சீனா அல்லது வேறு எந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதோ, அந்தந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்படும் என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.
மாநில சுகாதார அமைச்சர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த வீடியோ கான்பிரன்சிங் ஆய்வு கூட்டத்தில் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மற்றும் இணை அமைச்சர் அஸ்வினி சவுபே இன்று (ஏப்., 24) பங்கேற்றனர். இதில் பேசிய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், “எங்கு உதவி தேவைப்பட்டாலும் அங்கு எங்களது மூத்த அதிகாரிகளை அனுப்ப தயாராக உள்ளோம். அவர்கள் கண்காணிப்பாளர்களாக இல்லாமல், ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு அளிக்க அங்கு வருவார்கள். அவர்களிடம் கருத்துக்களை பெற்று மேலும் உதவியை விரிவாக்குவது எப்படி என அறிவோம். கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டம் மூன்றரை மாதங்களை கடந்துவிட்டது.
அனைத்து மாநிலங்களும் சிறப்பாக செயலாற்றுகின்றீர்கள்.” என பாராட்டினார். “உலக நாடுகளில் குறைவான நோயாளிகள் கொண்ட நாடாக இந்தியா மட்டுமே உள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான பணியில் சரியான பாதையிலேயே செல்கிறோம். நம்பிக்கையுடன் செல்வோம். அனைத்து மாநிலங்களின் உதவியால், மூன்றாம் கட்ட பரவலில் நுழையாமல் நாம் தடுத்து விட்டோம்.” என கூறினார். மேலும், சரியாக வேலை செய்யாத, பழுதான ஆன்டிபாடி பரிசோதனை கருவிகள், சீனா அல்லது எந்த நாட்டைச் சார்ந்ததோ, அந்தந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பப்படும்.
நாம் அவற்றுக்கு இன்னும் பணம் செலுத்தவில்லை என தெரிவித்தார். தவறான முடிவுகளை காட்டியதால் ஆன்டிபாடி பரிசோதனைகளை நிறுத்துமாறு மாநிலங்களுக்கு கடந்த செவ்வாயன்று மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.